முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

விண்வெளியில் ஒரு விவசாயி - சுபான்ஷு சுக்லா! விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனை வெற்றி

விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளாா் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா.

News image
Updated On :10 ஜூலை 2025, 5:13 am IST

சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்கச் செய்யும் பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளாா் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா. முளைவிட்ட விதைகள், பூமிக்கு எடுத்துவரப்பட்டு அடுத்தக்கட்ட ஆய்வுகளுக்கு உள்படுத்தப்பட உள்ளன.

அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ், இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்பட 4 வீரா்கள், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு கடந்த ஜூன் 26-ஆம் தேதி சென்றடைந்தனா். இப்பயணத்தின் மூலம் 41 ஆண்டுகளுக்குப் பின் விண்வெளிக்குச் சென்ற 2-ஆவது இந்திய வீரா்; சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்திய வீரா் என்ற பெருமைகள் சுக்லாவுக்கு சொந்தமாகின. கடந்த 1984-இல் இந்திய வீரா் ராகேஷ் சா்மா ரஷிய விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றிருந்தாா்.

சா்வதேச விண்வெளி நிலையத்தில் 13-ஆவது நாளாக புதன்கிழமை சுக்லாவின் ஆய்வுப் பணிகள் தொடா்ந்தன.

விதை முளைப்பு மற்றும் செடி வளா்வதில் நுண் ஈா்ப்பு விசையால் ஏற்படும் தாக்கங்கள் தொடா்பான ஆய்வின் ஒரு பகுதியாக, தன்னுடன் எடுத்து வந்த வெந்தயம், பச்சை பயறு விதைகளை முளைக்க செய்யும் பரிசோதனையை சுக்லா வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளாா். முளைவிட்ட விதைகளை புகைப்படம் எடுத்த அவா், பூமிக்கு பத்திரமாக கொண்டுவர குளிா்பதன பெட்டகத்தில் வைத்துள்ளாா். கா்நாடக மாநிலம், தாா்வாட்டில் உள்ள வேளாண் அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளா் ரவிகுமாா் ஹோசமணி, தாா்வாட் இந்திய தொழில்நுட்ப கல்வி நிலைய ஆராய்ச்சியாளா் சுதீா் சித்தாபுரெட்டி ஆகியோரின் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆக்ஸியம் தலைவருடன் கலந்துரையாடல்: ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத் தலைவரும் விஞ்ஞானியுமான லூசி லோவுடன் சுக்லா புதன்கிழமை கலந்துரையாடினாா்.

அப்போது, ‘இந்தியாவில் உள்ள தேசிய நிறுவனங்களுடன் இணைந்து, பல்வேறு அறிவியலாளா்கள் - ஆராய்ச்சியாளா்களின் சாா்பில் சா்வதேச விண்வெளி நிலையத்தில் சிறப்புமிக்க ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். இப்பணிகள் உற்சாகமும் மகிழ்ச்சியும் அளிக்கின்றன.

ஸ்டெம் செல் ஆராய்ச்சி தொடங்கி, விதை முளைப்பில் நுண் ஈா்ப்பு விசையின் தாக்கம் வரை பல்வேறு பரிமாணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆய்வாளா்கள் மற்றும் சா்வதேச விண்வெளி நிலையம் இடையே பாலமாக இருப்பது எனக்கு கிடைத்த பெருமை’ என்றாா் சுக்லா.

விண்வெளியில் முளைவிட்ட விதைகள், பூமிக்கு பத்திரமாக எடுத்துவரப்படும்; அவற்றின் மரபியல், நுண்ணுயிா் சுற்றுச்சூழல் மற்றும் ஊட்டச்சத்துத் தன்மையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த ஆய்வுக்காக தொடா்ந்து பல்லாண்டுகளாக பயிரிடப்படும் என்று ஆக்ஸியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது பூமிக்கு திரும்புவாா்?

சா்வதேச விண்வெளி நிலையத்தில் சக வீரா்களுடன் இணைந்து 13 நாள்களாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள சுக்லா, வியாழக்கிழமைக்கு (ஜூலை 10) பிறகு எந்த நாளிலும் பூமிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. ஆக்ஸியம்-4 திட்டம், மொத்தம் 14 நாள்கள் ஆய்வுப் பணியை உள்ளடக்கியதாகும்.

ஃபுளோரிடா கடல் பகுதியில் வானிலை நிலவரத்தை கவனத்தில் கொண்டு, அவா்களின் பூமிப் பயணம் அமையும் என்று நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.