
இத்தாலி தலைநகர் ரோமில், உக்ரைன் அதிபர் விளாதிமீர் ஸெலன்ஸ்கி, போப் பதினான்காம் லியோவை சந்தித்து, ரஷியாவுடனான போரின் பாதிப்புகள் குறித்து உரையாடியுள்ளார்.
ரோமில் வரும் ஜூலை 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் உக்ரைன் மீட்பு மாநாட்டில் கலந்துக்கொள்ள, உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி இத்தாலிக்கு வருகைத் தந்துள்ளார்.
இதையடுத்து, ரோமிலுள்ள வாடிகன் நகரத்தின் தலைவரும், கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப்-ன் கோடைக்கால தங்குமிடமான காஸ்டல் கண்டொல்ஃபோவில், போப் பதினான்காம் லியோவை சந்தித்து அவர் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், அதிபர் ஸெலன்ஸ்கி ரஷியாவால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஆயிரக்கணக்கான குழந்தைகளை உக்ரைன் மீட்க உதவிய, பேராலயத்துக்கு தனது நன்றிகளைத் தெரிவித்ததாகவும், இருவரும் நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கான அவசர தேவையைக் குறித்து கலந்துரையாடியதாகவும் வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், கடந்த மே மாதம் ரஷியா நிராகரித்த வாடிகன் தலைமையிலான உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக் குறித்து இருவரும் உரையாடியதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டு மக்களுக்காக போப் தனது வருத்தங்களைத் தெரிவித்ததுடன், கைதிகளின் விடுதலைக்கு இருதரப்பும் இணைந்து முடிவுக்காண வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பில், தனது தலைமையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷியா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் வாடிகன் நகருக்கு வரவேண்டும் எனும் தனது விருப்பத்தையும் போப் பதினான்காம் லியோ மீண்டும் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.