
கனடா மீது அமெரிக்கா அதிகப்படியான வரிகளை விதித்துள்ள நிலையில், கனடா அரசு அந்நாட்டிலுள்ள தொழிலாளிகள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கும் என பிரதமர் மார்க் கார்னி உறுதியளித்துள்ளார்.
கனடா நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு 35 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அது வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேற்று (ஜூலை 10) தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, அதிபர் டிரம்ப் வெளியிட்டிருந்த கடிதத்தில், அமெரிக்காவிற்குள் ஃபெண்டானைல் எனப்படும் போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க கனடா அரசு தவறிவிட்டதாகவும்; அதனால், விதிக்கப்பட்டுள்ள இந்த வரிகளை ஏற்காமல் கனடா வரி அதிகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவுடன் தற்போது மேற்கொண்டு வரும் வர்த்தக பேச்சுவார்த்தை முழுவதிலும், கனடா அரசு தனது தொழிலாளிகள் மற்றும் வணிகங்களை உறுதியாகப் பாதுகாத்து வருவதாக, கனடா பிரதமர் மார்க் கார்னி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, வட அமெரிக்கா பகுதிகளில் போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுப்பதில் கனடா பல முக்கிய முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாகக் கூறிய அவர், அமெரிக்காவுடன் இணைந்து இருநாடுகளிலும் உள்ள மக்களையும், சமூகத்தையும் பாதுகாக்கத் தொடர்ந்து செயல்படுவதில் உறுதியாகவுள்ளதாகவும், கூறியுள்ளார்.
கடந்த சில நாள்களாக, தனது வர்த்தக போர் நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரப்படுத்தி வருகின்றார். ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கும் அவர் 50 சதவிகிதம் வரி விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.