
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின்போது 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், தனது தலையீட்டால் போர்நிறுத்தப்பட்டது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல்களில் ஈடுபட்டன. பின்னர், இருநாட்டு தலைவர்களின் ஒப்புதலின்படி போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அன்றுமுதல், தனது தலையீட்டால், இருநாடுகளும் போர் நடவடிக்கைகளை கைவிட்டதாகவும், வர்த்தகத்தை வைத்து மிரட்டிதான் போர்நிறுத்தம் கொண்டு வந்ததாகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறிவருகிறார்.
இந்தக் கருத்துக்களை, முற்றிலும் மறுத்த இந்திய அரசு, இருநாடுகளின் ராணுவத்துக்கும் இடையிலான பேச்சுவாரத்தைகளினாலே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதாகக் கூறியிருந்தது.
இந்நிலையில், அதிபரின் வெள்ளை மாளிகையில் நேற்று (ஜூலை 18) நடைபெற்ற விருந்தில் பேசிய அதிபர் டிரம்ப், இந்தியா - பாகிஸ்தான் மோதலில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியுள்ளார். இருப்பினும், அந்த விமானங்கள் எந்த நாட்டுடையது என்பதை அவர் விவரிக்கவில்லை.
தொடர்ந்து அவர் பேசியதாவது:
“இரண்டு அணுசக்தி ஆயுதங்கள் கொண்ட நாடுகளும், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டன. அது மேலும், வளர்ந்து கொண்டே சென்றது. ஆனால், அதை நாங்கள் வர்த்தகத்தை வைத்து முடிவுக்கு கொண்டு வந்தோம். நாங்கள் சொன்னோம், நீங்கள் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டால், நாங்கள் உங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டோம் என்று கூறினோம். அது அணு ஆயுதங்களாகக் கூட இருக்கலாம். இரண்டுமே, அணுசக்தி ஆற்றல் கொண்ட நாடுகள்” என்று அவர் பேசியுள்ளார்.
இத்துடன், வெறும் 6 மாதங்களில் அதிகமான சாதனைகளை அவரது அரசு செய்துள்ளதாகவும், பல தீவிரமான போர்களை அவர்கள் நிறுத்தியுள்ளதாகவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
கடந்த, ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்தியா ’ஆபரேஷன் சிந்தூர்’ எனும் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இதில், அங்கிருந்த ஏராளமான பயங்கரவாத முகாம்கள் மற்றும் கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டன.
பஹல்காம் தாக்குதலுக்கு, லஷ்கர்-இ-தெய்பாவின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ எனும் அமைப்பு பொறுப்பேற்றது. இந்த அமைப்பை கடந்த ஜூலை 17 ஆம் தேதி அமெரிக்க அரசு பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ‘காஸாவில் ஆயிரக்கணக்கான வீடுகளை அழிக்கும் இஸ்ரேல்’
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.