
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் கையில் விலங்கிட்டு, சிறையில் அடைக்கப்படுவது போன்ற செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட விடியோவை அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதில் சித்தரிக்கப்பட்டவை என்றோ, உண்மையான விடியோ அல்ல என்றும் டிரம்ப் பதிவிடாதது கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
ட்ரூத் என்ற சமூக வலைத்தளப் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்திருக்கும் விடியோவில், யாரும் சட்டத்துக்கு மேலானவர்கள் இல்லை என்றும் பதிவிடப்பட்டிருக்கிறது.
அதில் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய விடியோ ஒன்றில், அமெரிக்க அதிபர் மாளிகையான ஓவல் அலுவலகத்தில், ஒபாமாவை தரையில் அமர்த்தி, கைகளை பின்னால் எடுத்து, இரண்டு எஃப்பிஐ அதிகாரிகள் விலங்கிடுகிறார்கள். இதனை அதிபர் டொனால்ட் டிரம்ப் சோஃபாவில் அமர்ந்து புன்னகைத்தவாறு பார்த்துக் கொண்டிருப்பதாக அந்த விடியோ அமைந்துள்ளது.
அந்த போலியான விடியோ, ஒபாமா சிறையில், கைதிகளுக்கான ஆரஞ்சு நிற சீருடையில் நின்றிருப்பது போல முடிகிறது.
இந்த விடியோ போலியானது என்றோ, சித்தரிக்கப்பட்டது என்றோ டிரம்ப் குறிப்பிடவில்லை. இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகிறார்கள். கொஞ்சம் கூட பொறுப்பில்லாதவர் என்ற விமர்சனங்களும் வந்துள்ளன.
கடந்த வாரம், பராக் ஒபாமா ஒரு மிகப்பெரிய தேர்தல் மோசடியாளர் என்று டிரம்ப் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இன்று இந்த விடியோவை இன்று பகிர்ந்துள்ளார்.
கடந்த வாரம், அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட், 2016 தேர்தலுக்குப் பிறகு, டிரம்ப்-ரஷ்யா கூட்டுக் கோட்பாட்டை முன்னாள் ஒபாமா அதிகாரிகள் தயாரித்ததாக அதிர்ச்சியூட்டும், மிக முக்கிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறினார். மேலும், ஒபாமா மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில்தான், டிரம்ப் இதுபோன்ற ஏஐ தயாரித்த விடியோவை வெளியிட்டு, பொறுப்பற்ற அதிபர் என்ற விமர்சனத்தைப் பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.