
வரும் ஆகஸ்ட் 1 முதல் இந்திய பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் தொடர் இழுபறியில் இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ரஷியாவிடமிருந்து அதிகளவில் எரிபொருள் வாங்குவதால் கூடுதலாக வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னுடைய ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 20 - 25% வரி விதிக்கப்படும் என இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஜூலை 31ஆம் தேதியுடன் இதற்கான காலக்கெடு முடிவடையும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
அமெரிக்காவின் சர்வதேச வர்த்தகத்தில் பெரியளவில் ஏற்றத்தாழ்வு இருப்பதாகக் குற்றஞ்சாட்டி வந்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் உலக நாடுகளைத் தொடர்ந்து எச்சரித்து வருகிறார்.
ஏற்கனவே, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை, வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்த டிரம்ப், ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் அந்நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக வரிகளை விதித்து வருகிறார். இந்த புதிய வரிவிதிப்பு முறையை அறிவித்து ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கூறியிருந்தார்.
இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தையில் இருக்கும் நிலையில், செவ்வாய்க்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிரம்ப், “இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. ஒருவேளை இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் முடிவு எட்டப்படவில்லை என்றால் 25 சதவிகிதம் வரை இறக்குமதி வரியை எதிர்கொள்ளக்கூடும் என்று எச்சரித்திருந்த நிலையில், இன்று மாலையே இந்த அறிவிப்பு வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியா, அமெரிக்காவுக்கு நல்ல நண்பராக இருந்து வந்தாலும், வேறு எந்த நாடும் வசூலிக்காத அளவுக்கு அமெரிக்க பொருள்களுக்கு வரி வசூலிக்கப்படுகிறது என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாத அனைத்து நாடுகளுக்கும் 15 அல்லது 20 சதவிகிதம் மட்டுமே வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வந்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு 25 சதவீத வரியை விதித்துள்ளார். முன்னதாக, கனடாவுக்கு 35 சதவிகிதமும், அல்ஜீரியா, இலங்கை மற்றும் இராக் ஆகிய நாடுகளுக்கு 30 சதவிகித வரியும், புரூணே, லிபியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளுக்கு 25 சதவிகிதமும், பிலிப்பின்ஸுக்கு 20 சதவிகிதமும் டிரம்ப் அதிரடியாக வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா உள்பட பல உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த ஏப்ரலில் விதித்த கூடுதல் வரி ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
இந்த கால அவகாசத்துக்குள் இந்தியா - அமெரிக்கா இடையே இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை எட்ட இரு நாடுகளும் தீவிரமாகப் பேச்சுவாா்த்தை நடத்தி வந்தன. ஆனால், இறுதி நேரத்தில், பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் இன்று இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தை
இரு நாடுகளுக்கும் இடையேயான வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக 5-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை வாஷிங்டனில் கடந்த வாரம் நிறைவடைந்தது. இந்தியா சாா்பில் மத்திய வா்த்தக துறையின் சிறப்புச் செயலா் ராஜேஷ் அகா்வாலும், அமெரிக்கா சாா்பில் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அந்நாட்டு உதவி வா்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்சும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இந்நிலையில், 6-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தைக்காக அமெரிக்க குழுவினா் அடுத்த மாதம் 25-ஆம் தேதி இந்தியா வரவுள்ளனா். இதையொட்டி, அமெரிக்க அதிபரின் வா்த்தக ஆலோசகா் ஜேமிசன் கிரீா் கூறுகையில், ‘இந்திய அதிகாரிகளுடன் தொடா்ந்து பேசி வருகிறோம். எங்கள் பேச்சுவாா்த்தைகள் எப்போதும் ஆக்கபூா்வமாகவே உள்ளன’ என்று குறிப்பிட்டிருந்தார்.
வா்த்தக ஒப்பந்த பேச்சுவாா்த்தையில், அமெரிக்கா விதித்துள்ள 26 சதவீத கூடுதல் வரியை நீக்குமாறும், எஃகு (50 சதவீதம்), அலுமினியம் உள்ளிட்ட உலோகங்கள் மற்றும் வாகனத் துறை (25 சதவீதம்) மீதான வரிகளைக் குறைக்குமாறும் இந்தியா கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது
இதையும் படிக்க.. கூகுளின் ஏஐ சம்மரி: இணையதளங்களுக்கு சவால்! இனி என்னவாகும்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.