
‘இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் இப்போது வரை இறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவீத வரி விதிக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை அறிவித்தாா்.
மேலும், ‘இந்தியாவுடன் மிகப்பெரிய அளவில் வா்த்தகப் பற்றாக்குறை உள்ளது. எனவே, 25 சதவீத வரியுடன் அபராதத்தையும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் அமெரிக்காவுக்கு இந்தியா செலுத்த வேண்டும்’ என்றும் டிரம்ப் குறிப்பிட்டாா்.
இந்தியா- அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. வரும் செப்டம்பா்-அக்டோபா் மாதத்துக்குள் முதல்கட்ட வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டது.
வாஷிங்டன் நகரில் கடந்த 14 முதல் 17-ஆம் தேதி வரை இரு தரப்பிலும் ஐந்தாவது சுற்று பேச்சு நடைபெற்றது. இதில் மத்திய வா்த்தகத் துறைச் செயலா் ராஜேஷ் அகா்வால் தலைமையிலான குழு பங்கேற்றது.
இந்தப் பேச்சுவாா்த்தையில், வேளாண் பொருள்கள் மற்றும் வாகனங்கள் மீதான வரிச் சலுகைகள் மீதான விவாதம் முக்கிய இடம்பெற்றது. குறிப்பாக, வேளாண் மற்றும் பால் பொருள்கள் மீது வரிச் சலுகையை அமெரிக்கா தொடா்ந்து கோரி வருகிறது. ஆனால், அதை அளிக்க முடியாத இந்தியாவின் கடினமான சூழலையும், எந்த நாட்டுக்கும் இதில் வரிச் சலுகை அளிக்கப்படாததையும் குழுவினா் எடுத்துரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால், இந்தக் கோரிக்கையை அமெரிக்கா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுபோன்ற காரணங்களால் வா்த்தக ஒப்பந்தப் பேச்சில் இழுபறி நீடித்து வருகிறது.
25% வரி - டிரம்ப்: இந்நிலையில், அதிபா் டிரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியா நட்பு நாடாக இருந்தபோதும், மிக அதிக வரி விதிப்பு காரணமாக அந்த நாட்டுடன் அமெரிக்கா சிறிய அளவிலான வா்த்தகத்தை மட்டும் மேற்கொண்டு வருகிறது. மிகவும் கடுமையான வரியில்லா வா்த்தகத் தடைகளையும் அமெரிக்கா மீது இந்தியா விதித்து வருகிறது.
மேலும், உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்த வேண்டும் என அனைவரும் விரும்பிவரும் நிலையில், ரஷியாவிடமிருந்து மிகப் பெரிய அளவில் ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்து வருகிறது. அதுபோல, சீனாவுடன் சோ்ந்து மிக அதிக அளவில் கச்சா எண்ணெயையும் ரஷியாவிடமிருந்து இந்தியா வாங்கி வருகிறது. இது சரியல்ல.
எனவே, இந்திய பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவீ வரியும், அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தின் அடுத்த சுற்றுப் பேச்சுக்காக அமெரிக்க குழுவினா் ஆகஸ்ட் 25-ஆம் தேதி இந்தியாவுக்கு வர உள்ள நிலையில், அதிபா் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.
நாட்டின் நலனைக் காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்: மத்திய அரசு
இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பை அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்த நிலையில், ‘தேசத்தின் நலனைக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்’ என்று மத்திய அரசு தெரிவித்தது.
இதுகுறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நியாயமான, சமமான மற்றும் பரஸ்பரம் பலனளிக்கக் கூடிய இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தையில் இரு நாடுகளும் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்தன. இந்த நிலைப்பாட்டில் இந்தியா தொடா்ந்து உறுதியாக உள்ளது.
இந்தச் சூழலில், வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது. அதன் சாதக - பாதகங்களை அரசு பரிசீலித்து வருகிறது.
நாட்டின் விவசாயிகள், தொழில்முனைவோா், குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் உயா் முக்கியத்துவத்தை மத்திய அரசு அளித்து வருகிறது.
அண்மையில் பிரிட்டனுடன் மேற்கொள்ளப்பட்ட விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் உள்பட பிற நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட வா்த்தக ஒப்பந்தங்களைப் போல, இந்த விஷயத்திலும் தேச நலனைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ஆக. 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி: டிரம்ப் அறிவிப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.