
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த 166 உறுப்பினர்களுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக் - இ - இன்ஸாஃப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு, கடந்த 2023-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தச் சம்பவத்தின்போது, பஞ்சாப் மாகாணத்தில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய போராட்டமானது கலவரமாக மாறியது. அப்போது, பாகிஸ்தானின் புலனாய்வுத் துறை அலுவலகம் உள்ளிட்ட ஏராளமான அரசு அலுவலகங்களும், ராணுவத் தளவாடங்களும் போராட்டக்காரர்களால் அடித்து தகர்க்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் 185 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட நிலையில், 108 பேருக்கு, ஃபைசலாபாத்திலுள்ள பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, இன்று (ஜூலை 31) தீர்ப்பளித்துள்ளது. மேலும், 77 பேர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், ஃபைசலாபாத் நகரத்தில் இருந்த காவல் நிலையம் மீதான தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட 58 பேருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தேசிய சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஒமர் அயூப், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஷிபிலி ஃபராஸ் மற்றும் சார்தாஜ் குல், ஷாஹிப்சடா ஹமித் ரஸா உள்ளிட்ட தெஹ்ரீக் - இ - இன்ஸாஃப் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களில் பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் உள்பட தேசிய சட்டமன்றத்தின் 6 உறுப்பினர்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து தெஹ்ரீக் - இ - இன்ஸாஃப் கட்சியின் இடைக்காலத் தலைவர் பாரிஸ்டர் கோஹர் அலி, லாஹூர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.
முன்னதாக, பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைதானபோது, அவரது லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் அந்நாட்டின் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவரது கட்சியைச் சேர்ந்த சுமார் 10,000 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, இம்ரான் கான் விடுதலைச் செய்யப்பட வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் அவரது ஆதரவாளர்கள் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், இந்தத் தீர்ப்பானது தற்போது வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: நட்பினால் நஷ்டமா? மோடி - டிரம்ப் உறவு குறித்த கணிப்பு உண்மையானது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.