டெல் அவிவ் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்! கடும் சேதம் - விடியோ

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்.
டெல் அவிவ் நகரம் பிடிஐ புகைப்படம்
டெல் அவிவ் நகரம்பிடிஐ
Published on
Updated on
2 min read

‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, அந்நாட்டுத் தலைநகர் டெல் அவிவ் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 63 பேர் காயமடைந்தனர்,

ஏராளமான கட்டங்களுக்கு கடும் சேதமேற்பட்டிருப்பதாக விடியோக்கள் மூலம் தெரிய வருகிறது.

ஈரான் தலைநகா் தெஹ்ரானில் உள்ள அணுஆயுத தளங்கள், ஏவுகணை தயாரிப்பு ஆலைகள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனால் தனது வான் எல்லைகளை ஈரான் மூடியிருந்தது.

டெல் அவிவ்
டெல் அவிவ்

இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக, வெள்ளிக்கிழமை நள்ளிரவில், தலைநகர் டெல் அவிவ் நகரம் மீது ஈரான் ஏவுகணைகளைக் கொண்டு தாக்கியது. இதில் ஏராளமான கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்திருக்கும் விடியோக்களும் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க.. போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம்: நெதன்யாகு அழைப்பை நிராகரித்த புதின்!

டெல் அவிவ் நகரின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் காயமடைந்தவர்கள் இசிலோவ் மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் லேசான காயங்கள் அடைந்திருப்பதாகவும், ஒரு சிலர் மட்டும் படுகாயமடைந்திருப்பதகாவும் கூறப்படுகிறது.

பத்துக்கும் மேற்பட்ட ஈரான் ஏவுகணைகள் தாக்கியுள்ளன. இஸ்ரேலி பாதுகாப்பு அமைப்பால் சில ஏவுகணைகள் முறியடிக்கப்பட்டன. நாட்டில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் பேரிடர் மீட்புப் படை விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களின் விடியோக்களை மக்கள் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என்றும், தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தக்கூடும் என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது.

ஈரான் மீது, ‘ஆப்பரேஷன் ரைஸிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேலில் நடத்திய தாக்குதல் நடவடிக்கைக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதன் மூலம், இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் எழுந்துள்ளது.

பதுங்கியிருந்து இரையைப் பிடிக்கும் சிங்கத்தைப் போல, ஈரானின் அணுசக்தி திட்டங்களை நிா்மூலமாக்குவதற்காக ஆண்டுக்கணக்கில் திட்டமிட்டு அதனை செயல்படுத்தத் தொடங்கியுள்ளதால் இந்த தாக்குதலுக்கு ‘எழும் சிங்கம்’ என்று இஸ்ரேல் பெயர் வைத்திருக்கிறதாம்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் உள்பட பல பகுதிகள் மீது ஈரான் நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருக்கிறது.

இந்த தாக்குதலில், இஸ்ரேலின் மத்திய பகுதியான ரிஷான் லெஸியன் நகரில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. கட்டடங்களில் விழுந்த ஏவுகணைகளால் பல கட்டடங்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த தாக்குதலில் 2 பேர் பலியானதாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தாக்குதலில், இஸ்ரேலின் கட்டடங்கள் நொறுங்கிக் கிடக்கும் விடியோக்களும் வெளியாகி வருகிறது.

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளனர். வீடுகள், கட்டடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

தொடங்கியதா போர்?

60 சதவீதத்துக்கும் மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்பு ஈரானிடம் உள்ளதாகவும், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அணு ஆயுதத்தைத் தயாரித்துவிடுமோ அச்சத்தில் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்.

ஈரானின் சுமாா் 100 நிலைகள் மீதான முதல்கட்ட தாக்குதலில் இஸ்ரேலின் 200 போா் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், நாட்டின் மொஸாட் உளவு அமைப்பின் மூலம் ஈரானுக்குள் ட்ரோன்கள் கடத்திச் செல்லப்பட்டு, அவற்றின் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ஈரானின் முப்படை தலைமைத் தளபதி முகமது பகேரி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (ஐஆா்ஜிசி) தலைமைத் தளபதி ஹுசைன் சலாமி, அந்தப் படையின் ஏவுகணை திட்டத் தலைவா் அமீா் அலி ஹாஜிசாதே உள்ளிட்டோா் கொல்லப்பட்டதாகவும் அணுசக்தி விஞ்ஞானிகள் சிலரும் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com