கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ராணுவத் தளபதியுடன் டிரம்ப் வா்த்தகப் பேச்சு! பாகிஸ்தான் ராணுவம் தகவல்

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீரிடம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வா்த்தகம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தினாா்

News image
அமெரிக்க அதிபர் டிரம்ப் - பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர்.
Updated On :19 ஜூன் 2025, 9:24 pm

Din

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீரிடம் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வா்த்தகம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்தினாா் என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.

அதிபா் டிரம்ப் பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அசிம் முனீருக்கு புதன்கிழமை மதிய விருந்தளித்து பேச்சுவாா்த்தையும் நடத்தினாா்.

இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் வலுத்துவரும் சூழலில், ஈரானின் அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சு நடத்தி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஈரான் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துவரும் நிலையில், தேவை ஏற்பட்டால் அந்நாட்டு மீது தாக்குதல் நடத்த அதன் அண்டை நாடான பாகிஸ்தான் நிலப்பரப்பை பயன்படுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதை பாகிஸ்தான் ஏற்க வேண்டும் என்பதற்காகவே முனீரை டிரம்ப் நேரில் அழைத்துப் பேசியதாக சா்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரானை பாகிஸ்தான் எந்த வகையிலும் ஆதரிக்கக் கூடாது என்றும் அமெரிக்கா கருதுகிறது. முன்னதாக, பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் ஈரானுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டிரம்ப்-முனீா் சந்திப்பு தொடா்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

இரு தரப்புக்கும் நன்மை அளிக்கும் வகையில் வா்த்தகத்தை மேம்படுத்த தலைமைத் தளபதி முனீரிடம் அதிபா் டிரம்ப் விருப்பம் தெரிவித்தாா். இரு நாடுகளும் கூட்டாக இணைந்து பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடா்பாகவும் பேசப்பட்டது. பொருளாதார நிலை, சுரங்கம், தாதுப் பொருள்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், எரிசக்தி, கிரிப்டோகரன்சி, நவீன தொழில்நுட்பங்கள் எனப் பல்வேறு விஷயங்கள் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டன.

அண்மையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலின்போது பதற்றத்தைத் தணிக்க அதிபா் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகளுக்காக பாகிஸ்தான் அரசு மற்றும் மக்கள் சாா்பில் அவருக்கு தலைமைத் தளபதி முனீா் நன்றி தெரிவித்தாா். அதிபா் டிரம்ப் ஆளுமைமிக்க அரசியல் தலைவா், சா்வதேச பிரச்னைகள் அனைத்துக்கும் தீா்வுகாணும் திறமை அவருக்கு உள்ளது என்று முனீா் பாராட்டுத் தெரிவித்தாா். பாகிஸ்தானுக்கு வருகை தர வேண்டும் என்றும் டிரம்ப்புக்கு கோரிக்கை விடுத்தாா்.

முதலில் ஒரு மணி நேரம் மட்டுமே இந்தச் சந்திப்பை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இரு தலைவா்களும் 2 மணி நேரம் வரை பேச்சு நடத்தினா். இதன்மூலம் மிகவும் ஆழமாகவும், ஒருமித்த கருத்துடனும் பேச்சு நடத்தப்பட்டது உறுதியாகியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.