
பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இருந்து சுமார் 613 ஆப்கானிஸ்தான் அகதிகள் நாடு திரும்பியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையத்தின் பிரதிநிதி அராபத் ஜமால், கடந்த 2024 ஆம் ஆண்டில் 21 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியதாகத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 21 முதல் 28 வரை ஈரான் 501 பேரை வெளியேற்றியதாகவும், பாகிஸ்தான் 112 பேரை வலுக்கட்டாயமாக நாடு கடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான், ஈரானில் இருந்து கட்டாயமாக நாடுகடத்தப்பட்டவர்கள் குறித்துப் பேசிய ஜமால், "ஆப்கானிஸ்தானின் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் அமைதிக்கு பங்களிக்கும் விதத்தில் சரியான முறையில் அவர்கள் நாடு திரும்புவதை உறுதிசெய்ய நாங்கள் உடன்பட்டுள்ளோம்" என்று கூறினார்.
நாடுகடத்தப்படும் மக்களை கண்ணியத்துடன் நடத்தவும், அவர்கள் வீடு திரும்புவதை உறுதி செய்யவும் அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார். அவர்களை சரிவர நடத்தவில்லை என்றால் எல்லையின் இருபுறமும் குழப்பமான சூழ்நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் போர் மற்றும் மோதலில் இருந்து தப்பி, பல ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பாகிஸ்தான் மற்றும் ஈரானில் தஞ்சம் புகுந்தனர்.
ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் நெருக்கடி, உறுதியற்ற தன்மைக்கு மத்தியில் ஆப்கானிஸ்தான் அகதிகள் திரும்புவது அவர்களின் நிலைமையை மேலும் மோசமானதாக ஆக்கும் என்று கூறப்படுகிறது. நாடுகடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் அகதிகள், பாகிஸ்தானில் கடுமையான துன்புறுத்தலை எதிர்கொண்டனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.