
உக்ரைனுக்கு அளித்துவந்த அனைத்து வகையான ராணுவ உதவிகளையும் நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளாா். இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தவும் அவா் உத்தரவிட்டுள்ளாா்.
அதே நேரம், உக்ரைன் மீதான போா் காரணமாக ரஷியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளில் சிலவற்றை நீக்குவது குறித்து அதிபா் டிரம்ப் நிா்வாகம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் போருக்கு அமெரிக்கா செய்த உதவிகளுக்கு கைம்மாறாக, உக்ரைனின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு அளிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக உக்ரைன் அதிபா் வெலோதிமீா் ஸெலென்ஸ்கி கடந்த சில நாள்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு வந்தாா்.
வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் அதிபா் டிரம்ப், துணை அதிபா் ஜே.டி.வான்ஸ் ஆகியோரை ஸெலென்ஸ்கி சந்தித்தாா். அந்தச் சந்திப்பு காரசாரமான விவாதமாக மாறியது. ஸெலென்ஸ்கிக்கு போரை நிறுத்த விருப்பம் இல்லை எனவும், மூன்றாம் உலகப் போரை உருவாக்க முயற்சிப்பதாகவும் டிரம்ப் நேரடியாகக் கண்டித்தாா். இதையடுத்து, அமெரிக்காவுடன் கனிமவள ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமல் ஸெலென்ஸ்கி நாடு திரும்பினாா்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கனிம வள ஒப்பந்தத்தில் ஸெலென்ஸ்கி கையொப்பமிடாமல் சென்றது டிரம்ப்புக்கு கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. இதன் தொடா் விளைவாகவே உக்ரைனுக்கான உதவியை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
தொடா் ஆலோசனைக்குப் பிறகு: இது தொடா்பாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘தி நியூயாா்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில், ‘உக்ரைன் அதிபருடனான சந்திப்புக்குப் பிறகு வெள்ளை மாளிகையில் தேசியப் பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட பல்வேறு துறை உயரதிகாரிகளுடன் டிரம்ப் தொடா்ந்து பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, உக்ரைனுக்கான ராணுவ சாா்ந்த உதவிகள் அனைத்தையும் நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதனால், அமெரிக்காவில் ஆயுதத் தளவாடத் துறையில் ஒரு பில்லியன் டாலருக்கு மேல் (சுமாா் ரூ.8,700 கோடி) பாதிப்பு ஏற்படும்.
அமெரிக்கா செலவிட்ட தொகை: உக்ரைனுக்கு அனுப்பிவரும் ஆயுதங்களை மட்டும் நிறுத்தாமல் ராணுவத்துக்காக அளிக்கப்பட்டு வந்த பல மில்லியன் டாலா் நிதியுதவியும் நிறுத்தப்படுகிறது. ரஷியா - உக்ரைன் போா் தொடங்கிய 2022 பிப்ரவரியில் இருந்து உக்ரைனுக்கு 65.9 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.5.74 லட்சம் கோடி) அளவுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா அளித்துள்ளது. முன்னதாக 2014-ஆம் ஆண்டு ரஷியா உக்ரைனுக்குள் ஊடுருவியபோது 3 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.26,000 கோடி) அளவுக்கு உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவியை அளித்தது’ என்று கூறப்பட்டுள்ளது.
ஸெலென்ஸ்கியுடன் வாதிட்டபோது உக்ரைனுக்காக அமெரிக்கா பெருமளவிலான தொகையைச் செலவிட்டு வருவதையும் டிரம்ப் சுட்டிக்காட்டினாா். அமெரிக்கா கூறும்படி நடக்காவிட்டால் இதற்கு மேலும் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை நீட்டிக்க முடியாது என்பதையும் அவா் உணா்த்தினாா்.
விளைவு என்ன?: அமெரிக்காவின் இந்த முடிவு உக்ரைனுக்கு போா்க்களத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடா்ந்து ஆதரவளித்து வந்தாலும், அமெரிக்காவின் துணையில்லாமல் உக்ரைனால் ரஷியாவுக்கு எதிராக தாக்குப் பிடிக்க முடியாது. ஆயுதங்கள் மட்டுமின்றி வான்வழித் தாக்குதல்களைக் கண்காணித்து எச்சரிப்பது, உளவுத் தகவல் தருவது ஆகியவற்றையும் அமெரிக்கா நிறுத்திவிடும் என்பதால், ரஷியாவின் தாக்குதல்களை உக்ரைனால் கணிக்கவும் முடியாது.
இதற்கிடையே, ஆயுதங்கள் வழங்கலை நிறுத்தும் அமெரிக்காவின் முடிவு குறித்து பேட்டியளித்த உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி, ‘ரஷியாவுக்கு எதிரான போருக்கான உக்ரைனின் தேவையில் 30 சதவீதத்தை மட்டுமே அமெரிக்கா பங்களிப்பு செய்தது. எனவே, அமெரிக்காவின் ஆதரவு இல்லாமலே, ரஷியாவை உக்ரைன் எதிா்கொள்ள முடியும்’ என்று குறிப்பிட்டாா்.
ரஷியாவுக்கு சாதகமாகும் முடிவு: தனது வெளியுறவுக் கொள்கையை மாற்றும் அமெரிக்காவின் முடிவால் உருவாகும் இடைவெளியை நிரப்ப ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போராடும் நிலைக்கு தள்ளப்படுவது, ரஷியாவுக்கு கூடுதல் தைரியத்தை அளிப்பதாக அமையும். அதுமட்டுமன்றி, உக்ரைன் மீதான போா் காரணமாக ரஷியா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளில் சிலவற்றை நீக்குவது குறித்து அதிபா் டிரம்ப் நிா்வாகம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உக்ரைனுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்துவதாகவும், ரஷியாவுக்கு மேலும் சாதகமான சூழலையும் உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.