
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கும், அந்த நாடுகள் அமெரிக்க ஏற்றுமதிப் பொருள்கள் மீது விதிக்கும் அதே வரியை விதிக்க விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-வது அதிபரான டொனால்ட் டிரம்ப், ஜனவரி மாதம் பதவியேற்றதற்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். அவர் பேசும்போது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் கடுமையான அமளியில் ஈடுபட்டனர். அமெரிக்க நாடாளுமன்றத்தில் அமளிக்கிடையே அதிபர் டிரம்ப் உரையாற்றினார்.
இதையும் படிக்க: அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது! -டிரம்ப்
இதற்கு முன் இருந்த அரசுகள் 4 ஆண்டுகள் அல்லது 8 ஆண்டுகளில் சாதித்ததைவிட, தன்னுடைய அரசு 43 நாள்களில் அதிகமாக சாதித்துள்ளது எனக் கூறி உரையைத் தொடங்கினார்.
இதுபற்றி டிரம்ப் பேசுகையில், “மற்ற நாடுகள் பல ஆண்டுகளாக நமது நாட்டுக்கு எதிராக வரிகளை விதித்து வருகின்றன. இப்போது அந்த நாடுகளுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
ஐரோப்பிய யூனியன், சீனா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ மற்றும் கனடா உள்ளிட்ட பிற நாடுகள் நாம் வசூலிப்பதைவிட மிக அதிகளவில் வரிகளை வசூலிக்கின்றன. இது மிகவும் நியாயமற்றது. இந்தியா எங்களிடம் 100 சதவிகிதத்துக்கும் அதிகமான வரியை வசூலிக்கிறது.
இந்த நடவடிக்கை சில பொருளாதார சீர்குலைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றாலும், அமெரிக்க தொழில்களைப் பாதுகாக்க இது ஒரு அவசியமான நடவடிக்கை.
அதிகப்படியான வரிவிதிப்புகளால் சிறிது இடையூறுகள் இருக்கும். ஆனால், நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அது பெரிய விஷயமாக இருக்காது. அதிகப்படியான வரிகள் டிரில்லியன் டாலர்களை உருவாக்கும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: தொகுதி மறுசீரமைப்பு தமிழ்நாட்டுக்கான தண்டனை! -விஜய்
இந்த அறிவிப்புகள் ஏற்கனவே உலகப் பொருளாதாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தாலும், கனடாவும் மெக்சிகோவும் அமெரிக்காவுக்கு எதிராக வரிகளை விதித்துள்ளன.
அதே நேரத்தில் அமெரிக்க வர்த்தக கட்டுப்பாடுகள் அதிகரித்தால் குறிப்பிடத்தக்க விளைவுகள் ஏற்படும் என்று சீனா எச்சரித்துள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் பதற்றங்கள் அதிகரித்துள்ளதால், இந்தியாவும் எதிர்வினையாற்றுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
பரஸ்பர வரிகளிலிருந்து இந்தியா தப்ப முடியாது என்று பிரதமர் மோடியிடம் டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார். வரிவிதிப்பு குறித்து யாரும் என்னுடன் வாதிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.