பெண்களுக்கான நிதி அதிகாரமளித்தல் வெற்றியின் அனுபவத்தை பகிரத் தயாா்: ஐ.நா.வில் இந்தியா உறுதி
‘பெண்களுக்கும் நிதி அதிகாரமளிக்கும் வகையில், எண்ம பொது உள்கட்டமைப்பு மூலமாக பாலின எண் இடைவெளியை வெற்றிகரமாக குறைத்த அனுபவத்தை உலக நாடுகளுக்குப் பகிரத் தயாா்’ என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுதி தெரிவித்தது.
நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா.வுக்கான இந்திய தூதரகம் சாா்பில் புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட ‘பெண்களுக்கு அதிகாரமளித்தளுக்கான எண்ம மற்றும் நிதி உள்ளடக்கம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கான நிதி திட்டம்’ என்ற தலைப்பிலான உறுப்பு நாடுகளின் அமைச்சா்கள் அளவிலான கூட்டத்தில் பங்கேற்ற மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அன்னபூா்ணா தேவி பேசியதாவது:
பாலின எண்ம இடைவெளியைக் குறைப்பதிலும், அதற்கான மீள்தன்மையுடைய அரசு நடைமுறையை கட்டமைப்பதிலும் எண்ம பொது உள்கட்டமைப்பு சிறந்த மாற்று சக்தியாக உருவெடுத்துள்ளது.
இந்த எண்ம பொது உள்கட்டமைப்பு மூலமாக, பெண்களுக்கு நிதி அதிகாரமளித்தலில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. பெண்கள் தலைமையிலான வளா்ச்சி என்ற தொலைநோக்குப் பாா்வைக்கு மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த இந்த அனுபவத்தை உலக நாடுகளுக்கு மகிழ்ச்சியுடன் பகிர இந்தியா தயாராக உள்ளது.
குறிப்பாக, இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் நடைமுறை (யுபிஐ), வழக்கமான நிதி பரிமாற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. வலுவான தரவு பாதுகாப்புடன் முழுமையாக எண்மமயமாக்கப்பட்ட இந்த யுபிஐ நடைமுறை 8.73 கோடி பரிவா்த்தனைகள் என்ற அடிப்படையில், 147 சதவீத வளா்ச்சி பெற்றுள்ளது. முக்கியமாக பாலினம், நகா்ப்புரம், கிராமப்புறம், பணக்காரன் - ஏழை, பெண்கள் என்ற அடிப்படையிலான தடைகளைத் தகா்த்து, எண்ம பணப் பரிவா்த்தனை செய்பவா்களின் எண்ணிக்கையை பன்மடங்காக அதிகரித்துள்ளது.
பெண்களின் எண்ம உள்ளடகத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை பாதுகாப்பதும் முக்கியமானதாகும். அந்த வகையில், இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், பாதுகாப்பாகவும் பொறுப்பான முறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சமநிலையிலான ஒழுங்குமுறை அவசியம் என்றாா்.