போப் பிரான்சிஸ்
போப் பிரான்சிஸ் AP

ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை.. மக்களைச் சந்திக்கிறார் போப்!

போப் பிரான்சிஸ் ஒரு மாதத்துக்குப் பின் மக்களைச் சந்திக்கிறார்!
Published on

ரோம் : போப் பிரான்சிஸ் ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாளை(மார்ச் 23) மக்களைச் சந்திக்கவிருக்கிறார்.

கடைசியாக, கடந்த மாதம் 14-ஆம் தேதி போப் பிரான்சிஸ் பொதுவெளியில் மக்களைச் சந்தித்து உரையாடினார். அதன்பின், உடல்நலக் குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போப் பிரான்சிஸ்(88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

போப் பிரான்சிஸ் இயற்கையாக சுவாசிக்க சிரமப்படுவது தொடருவதால், மூக்கின் வழியே குழாய் பொருத்தப்பட்டு அவருக்கு தேவையான ஆக்ஸிஜன் குழாய் மூலம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இரவில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசித்து வருவதாகவும் வாடிகன் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

இந்த நிலையில், இப்போதைய நிலவரப்படி, போப் பிரான்சிஸ் இரவில் வெண்டிலேட்டர் உதவியில்லாமல் மூச்சு விடுவதாகவும், நன்றாக தூங்கி ஓய்வெடுப்பதால் அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெமெலி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ள அறையிலிருந்தபடி, ஜன்னல் வழியாக அவர் மக்களைச் சந்திப்பார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, போப் பிரான்சிஸ் உடல்நலம் பெற வேண்டி பல இடங்களிலும் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மேற்கண்ட செய்தி உலகெங்கிலுமுள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com