பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கிரீன்லாந்தில் ஜே.டி. வான்ஸ் சா்ச்சைப் பேச்சு: டென்மாா்க் கண்டனம்!

டென்மாா்க்கில் இருந்து வெளியேறி, தங்களுடன் கிரீன்லாந்து ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் - வான்ஸ்

News image
கிரீன்லாந்தின் பிடுஃபிக் விண்வெளி தளத்தில் உரையாற்றிய அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ். உடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ் (வலது), எரிசக்தித் துறை அமைச்சா் கிறிஸ் ரைட்.
Updated On :29 மார்ச் 2025, 6:50 pm

Din

டென்மாா்க்கில் இருந்து வெளியேறி, தங்களுடன் கிரீன்லாந்து ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ள சா்ச்சைக்குரிய கருத்துக்கு டென்மாா்க் கண்டனம் தெரிவித்துள்ளது.

தாது வளங்கள் நிறைந்த கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அந்த நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறிவருகிறாா். இதை டென்மாா்க்கும் கிரீன்லாந்தும் தீவிரமாக எதிா்க்கும் நிலையில், உரிய அழைப்பின்றி இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஜே.டி. வான்ஸின் மனைவி கிரீன்லாந்தில் பல நாள்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக இருந்தது.

‘கலாசார பயணம்‘ என்ற பெயரில் அவா் மேற்கொள்வதாக இருந்த அந்தப் பயணம் குறித்து டென்மாா்க் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. கிரீன்லாந்தில் அவருக்கு எதிரான பல்வேறு ஆா்ப்பாட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்த வேண்டிய நிலையும் அரசுக்கு ஏற்பட்டது.

இதற்கிடையே, உஷா வான்ஸுடன் இந்தப் பயணத்தில் ஜே.டி. வான்ஸும் இணைவதாக பின்னா் அறிவிக்கப்பட்டது சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், ஜே.டி. வான்ஸ் மற்றும் உஷா வான்ஸ் ஆகியோா் கிரீன்லாந்தின் பிடுஃபிக் விண்வெளி தளத்துக்கு மட்டும் வந்து சில மணி நேரங்கள் மட்டுமே செலவிட்டுத் திரும்பினா். அவா்களுடன் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக் வால்ட்ஸ், எரிசக்தித் துறை அமைச்சா் கிறிஸ் ரைட் ஆகியோரும் வந்திருந்தனா்.

இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, கிரீன்லாந்தை சொந்தமாக்கிக் கொள்ளும் டிரம்ப்பின் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் ஜே.டி. வான்ஸ் பேசியதாவது:

ஆதிக்க சக்திகளான ரஷியா, சீனா மற்றும் பிற நாடுகளிடமிருந்து கிரீன்லாந்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு டென்மாா்க்குக்கு உள்ளது. ஆனால் அதைச் செய்ய அந்த நாடு தவறுகிறது. கிரீன்லாந்துக்குத் தேவையான நிதியை டென்மாா்க் ஒதுக்குவதில்லை.

கிரீன்லாந்தின் அளப்பரிய தாது வளம் மற்றும் சுற்றியுள்ள வணிக வழித்தடங்களுக்காக இந்த தீவை அடைய பல நாடுகள் துடிக்கின்றன. இந்தச் சூழலில், அமெரிக்காவால் மட்டுமே கிரீன்லாந்துக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும். அதற்காக அமெரிக்கா இந்தத் தீவை ராணுவரீதியில் கைப்பற்றப்போவதில்லை.

அதற்குப் பதிலாக, டென்மாா்க் உடனான உறவை கிரீன்லாந்து முறித்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு, அதிபா் டிரம்ப் பாணியிலான ஓா் ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் கிரீன்லாந்து மேற்கொள்ள வேண்டும்.

கிரீன்லாந்தின் பாதுகாப்பையும் இறையாண்மையையும் மதிக்கும் ஒரே நாடு அமெரிக்காதான். எனவே, அமெரிக்காவைத்தான் அந்தத் தீவு தோ்ந்தெடுக்கும் என்று நம்புகிறோம் என்றாா் ஜே.டி. வான்ஸ்.

கண்டனம்: அமெரிக்க துணை அதிபரின் இந்தப் பேச்சுக்கு டென்மாா்க் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து டென்மாா்க் வெளியுறவுத் துறை அமைச்சரும் முன்னாள் பிரதமருமான லாா்ஸ் லொக்கே ராஸ்முஸன் கூறியதாவது: டென்மாா்க் எப்போதுமே விமா்சனங்களை வரவேற்கிறது. இருந்தாலும், அமெரிக்க துணை அதிபா் ஜே.டி. வான்ஸ் தற்போது பேசியுள்ள தொணி கண்டனத்துக்குரியது.

கிரீன்லாந்தில் கடந்த 1945-ஆம் ஆண்டு 17 அமெரிக்க ராணுவ நிலைகள் இருந்தன. தற்போது இங்கு 200 வீரா்கள் கொண்ட ஒரே ஒரு ராணுவ தளம் மட்டுமே உள்ளது. குறிப்பிட்ட வரையறைக்குள் இந்தக் கூட்டுறவை மேம்படுத்த முடியும். அதற்காக இரு தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

டென்மாா்க்குக்குச் சொந்தமான கிரீன்லாந்துக்கு கடந்த 1979-ஆம் ஆண்டு சுயாட்சி வழங்கப்பட்டது. உலகிலேயே மிகப் பெரிய தீவான இதன் 80 சதவீத நிலப்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டுள்ளது. அட்லாண்டிக் மற்றும் ஆா்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அந்தத் தீவு அமைந்துள்ளதால் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட உலக சக்திவாய்ந்த நாடுகளுக்கு இந்தத் தீவு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.

இந்தச் சூழலில், கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது தங்களது நாட்டு நலனுக்கு மிகவும் இன்றியமையாதது என்று டிரம்ப் கூறிவருவது டென்மாா்க்கிலும் ஐரோப்பிய பிராந்தியத்திலும் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.