மியான்மரை உலுக்கிய நிலநடுக்கம்: ஆயிரத்தைத் தாண்டிய பலி!

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.
மியான்மர் நிலநடுக்கம்
மியான்மர் நிலநடுக்கம்
Published on
Updated on
1 min read

மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானோர் எண்ணிக்கை ஆயிரதைத் தாண்டியுள்ளதாக அந்த நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

மியான்மர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் நேற்று(28.03.25) பிற்பகல் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளும் நிலை குலைந்துள்ளது. பெரிய பெரிய கட்டடங்களும் நொடிப்பொழுதில் சீட்டுக்கட்டு போன்று சரிந்துள்ள காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

புவியியல் ஆய்வு மைய புள்ளிவிவரங்களின் படி, சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ, தொலைவில் 11.50 மணியளவில் முதல் நிலநடுக்கம் 7.7 அலகுகளாகவும், அதைத்தொடர்ந்து வலுவான இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 6.4 புள்ளியாகப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் மியான்மரின் பலபகுதிகளில் குறிப்பிடத்தக்கப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மண்டலாய் மற்றும் சகாய்ங் மாகாணங்களின் பல பகுதிகளில் மின் கம்பங்கள் சாய்ந்திருப்பதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப் படையினர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அண்டை நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் பல அடுக்குமாடி கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சரிந்துள்ளன. மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலாயை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன.

பாங்காக்கில் சுமார் 17 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பலர் உயரமான கட்டடங்களிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் வசிக்கின்றனர். இதுவரை 10 பேர் உயிரிழந்ததாகவும், 26 பேர் காயமடைந்துள்ளதாகவும், 47 பேர் இன்னும் காணவில்லை என்றும், அவர்களில் பெரும்பாலோர் தலைநகரின் பிரபலமான சதுசாக் சந்தைக்கு அருகிலுள்ள கட்டுமான தளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பாங்காக் நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடும் பாதிப்பைச் சந்தித்த மியாமன்ரில் கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 1,002 பேர் பலியானதாகவும், 2,376 பேர் காயமடைந்துள்ளதாகவும்,30-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் அந்த நாட்டு ராணுவ அரசு அறிவித்துள்ளது. இடிபாடுகளிலிருந்து தோண்டி தோண்டி உடல்கள் எடுக்கப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

ஏற்கெனவே மியான்மரில் உள்நாட்டுப் போரில் சிக்கித் தவிக்கும் சூழலில், இந்த நிலநடுக்கம் மேலும் வேதனைக்குள்ளாகியுள்ளது. இரு நாடுகளிலும் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றது. நிலநடுக்க பகுதியில் எங்கும் மரண ஓலங்களும், அழுகை குரலுமாகக் காணப்படுகிறது. தன் குடும்பத்தினரும், தன்னுடன் இருந்தவர்களும் எங்கேயாவது ஒரு மூலையில் உயிருடன் இருக்கமாட்டார்களா என்ற கூக்குரலிட்டுக் கதறும் மக்களின் குரல்கள் மனதைப் பிளக்கும் வகையில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com