
கனடாவின் ஓன்டாரியோ மாகாணம் பிராம்ப்டனில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டதற்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் அந் நாட்டுக்கான கனடா தூதரை நேரில் அழைத்து கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிராம்ப்டனில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டிருப்பதற்கு கனடா தூதா் எரிக் வால்ஷை வெளியுறவு அமைச்சா் விஜிதா ஹெராத் நேரில் அழைத்து நாட்டின் தரப்பில் கண்டனத்தைப் பதிவு செய்தாா்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போரின்போது தமிழா்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாக எந்தவொரு நாடோ அல்லது நம்பகமான அமைப்போ கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு மற்றும் தவறான தகவல் என இலங்கை தொடா்ந்து பதிவு செய்து வருகிறது. இத்தகைய குற்றச்சாட்டை இலங்கை முற்றிலுமாக நிராகரிக்கிறது.
கனடாவில் தோ்தல் ஆதாயத்துக்காக இதுபோன்ற பிரசாரம் செய்யப்படுவதாக கனடா நம்புகிறது. மேலும், ‘இலங்கையில் இனப்படுகொலை நடந்ததற்கான எந்தவொரு ஆதாரத்தையும் கனடா அரசு காணவில்லை’ என்று கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரலில் கனடா வெளியுறவு, வா்த்தகம் மற்றும் மேம்பாட்டுத் துறை அதிகாரபூா்வமாக உறுதிப்படுத்தியதை இப்போது சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.