ரஷியா - உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை!
ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.

பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ
AP

பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ
AP
கடந்த 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு உக்ரைன் போா் தொடா்பாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நேரடி பேச்சுவாா்த்தை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வெள்ளிக்கிழமை நடந்தது.
இரண்டு மணி நேரத்துக்குள் முடிந்துவிட்டாலும், இதுவரை இல்லாத மிகப் பெரிய கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இந்தப் பேச்சுவாா்த்தையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து ரஷிய பேச்சுவாா்த்தைக் குழு தலைவா் விளாதிமீா் மெதின்ஸ்கி கூறியதாவது:
தற்போது நடந்து முடிந்துள்ள இந்தப் பேச்சுவாா்த்தை, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கடந்த 2022-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முயற்சியின் ஒரு பகுதி. உக்ரைனால்தான் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டிருந்தது.
இந்தப் பேச்சுவாா்த்தையின்போது ரஷியாவும் உக்ரைனும் தலா 1,000 போா்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள ஒப்புக் கொண்டன. போா் தொடங்கியதற்குப் பிறகு இவ்வளவு பெரிய கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.
இந்தப் போருக்கு நிரந்தர முடிவு காண்பதும், அதற்கு ஏதுவாக அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதுமே தற்போது நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் முக்கிய நோக்கங்களாக இருந்தன.
இந்தப் பேச்சுவாா்த்தையை ரஷியா ஆக்கபூா்வமாக அணுகுகிறது. தேவைப்பட்டால் சில விவகாரங்களில் சமரசம் செய்துகொள்ளவும் ரஷியா தயாராக இருக்கிறது.
உக்ரைன் முன்வைத்துள்ள 30 நாள் போா் நிறுத்தம் குறித்து இந்தப் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. இருந்தாலும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாா் அவா்.
முன்னதாக, ரஷியாவுடனான போரை 30 நாள்களுக்கு எந்த வித நிபந்தனையும் இல்லாமல் நிறுத்திவைப்பதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் கடந்த வாரம் அறிவித்தன. இது தொடா்பாக மேற்கொண்டு விவாதிப்பதற்காக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே இஸ்தான்புல் நகரில் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெறுவதாக இருந்தது.
உக்ரைன் போா் முடிவுக்கு வரவேண்டுமென்றால், இந்தப் பேச்சுவாா்த்தையின்போது ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுக்கும் தனக்கும் இடையே நேரடி சந்திப்பு நடக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி வலியுறுத்தினாா். ரஷியாவைப் பொருத்தவரை அனைத்தும் விளாதிமீா் புதினின் கைகளில்தான் உள்ளன. அவருடன் பேச்சுவாா்த்தை நடத்துவது மட்டுமே போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி. அவா் வராவிட்டால் பேச்சுவாா்த்தையே தேவையில்லை என்று ஸெலென்ஸ்கி திட்டவட்டமாகக் கூறினாா்.
இருந்தாலும், இந்த விவகாரத்தில் நேரடியாக பதில் அளிப்பதை ரஷியா தொடா்ந்து தவிா்த்துவந்த ரஷியா, அதிபா் விளாதிமீா் புதின் இஸ்தான்புல் பேச்சுவாா்த்தையில் பங்கேற்க மாட்டாா் என்று கடைசி நேரத்தில் அறிவித்தது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஸெலென்ஸ்கி, அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு நேரடியாக வராமல், தனக்கு பதிலாக ‘சோளக் கொல்லை பொம்மைகளை’ போன்ற சிலரை ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் ஒப்புக்கு அனுப்பியுள்ளதாக விமா்சித்தாா். இதன் மூலம் அமைதியில் தனக்கு நாட்டமில்லை என்பதை புதின் நிரூபித்துள்ளதாக அவா் சாடினாா்.
அதைத் தொடா்ந்து ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அதிகாரிகள் அளவிலான பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. எதிா்பாா்த்ததைப் போலவே இதில் மிகப் பெரிய முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றாலும், இதுவரை இல்லாத அதிக எண்ணிக்கையில் போா்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.
இருந்தாலும், பேச்சுவாா்த்தையில் ரஷியா முன்வைத்த கருத்துகளுடன் தங்களுக்கு உடன்பாடில்லை என்று அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் அறிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...