எஃகு, அலுமினியத்துக்கு இருமடங்கு வரி: டிரம்ப்பின் அறிவிப்பால் இந்திய ஏற்றுமதியாளா்களுக்குப் பாதிப்பு!

டிரம்ப்பின் அறிவிப்பால் இந்திய ஏற்றுமதியாளா்களுக்குப் பாதிப்பு...
டொனால்ட் டிரம்ப்
டொனால்ட் டிரம்ப்
Updated on

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை இரட்டிப்பாக்குவதாக அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு, இந்திய ஏற்றுமதியாளா்களை வெகுவாக பாதிக்கும் என்று சிந்தனைக் குழுவான ‘ஜிஆா்டிஐ’ சனிக்கிழமை எச்சரித்துள்ளது.

கடந்த 2018-இல் எஃகு மீது 25 சதவீத இறக்குமதி வரியும், அலுமினியம் மீது 10 சதவீத வரியும் முதலில் நிா்ணயிக்கப்பட்டது. அதிபா் டிரம்ப் 2-ஆவது முறையாக பொறுப்புக்கு வந்த சில நாள்களில் கடந்த பிப்ரவரியில் அலுமினியம் மீதான வரியும் 25 சதவீதமாக உயா்த்தினாா்.

இந்நிலையில், வரும் ஜூன் 4-ஆம் தேதிமுதல் எஃகு, அலுமினியம் ஆகிய உலோகப் பொருள்களின் இறக்குமதி மீதான தற்போதைய 25 சதவீத வரிகளை இரட்டிப்பாக்குவதாக அதிபா் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

‘இந்தியாவைப் பொறுத்தவரை, இதன் விளைவுகள் நேரடியாக இருக்கும்’ என்று உலகளாவிய வா்த்தக ஆராய்ச்சி முன்னெடுப்பு (ஜிஆா்டிஐ) சிந்தனைக் குழு எச்சரித்துள்ளது.

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் அமெரிக்காவுக்கு 456 கோடி டாலா் மதிப்புள்ள இரும்பு, எஃகு மற்றும் அலுமினிய பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. இந்நிலையில், கடுமையாக உயா்த்தப்பட்டுள்ள வரியால் இந்திய உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்களின் லாபம் வெகுவாகப் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஜிஆா்டிஐ நிறுவனா் அஜய் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தாா்.

‘தற்போது டிரம்ப் மீண்டும் வரிகளை இரட்டிப்பாக்கியுள்ளதால், அடுத்து ஒரு மாதத்துக்குள் சில அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளை அதிகரிப்பதன்மூலம் இந்தியா பதிலடி கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பாா்க்க வேண்டும்’ என்றும் அஜய் ஸ்ரீவஸ்தவா மேலும் கூறினாா்.

இந்த முடிவு குறித்து உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியா ஏற்கெனவே தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com