

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் நடந்த சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் சமய்யா சுலுஹு ஹஸன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமய்யாவுக்கு ஆதரவாக 97 சதவித வாக்குகள் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் இத்தனை வாக்கு சதவீதத்தில் யாரும் வெற்றி பெற முடியாது என்று கருதப்படும் நிலையில், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுகளை இது உறுதிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டில் அப்போதைய அதிபர் ஜான் போம்பே மகுஃபுலி மரணமடைந்ததைத் தொடர்ந்து, துணை அதிபராக இருந்த சமய்யா சுலுஹு ஹஸன் அதிபர் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 29-ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, இரு முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு அவர் தடை விதித்தார். இதன் காரணமாக அவரை எதிர்த்து மிகச் சிறிய கட்சிகளைச் சேர்ந்த 16 பேர் போட்டியிட்டனர். இதனால் இந்தத் தேர்தல் ஒப்புக்காக நடத்தப்பட்டது என எதிர்க்கட் சிகள் குற்றஞ்சாட்டினர்.
இந்தத் தேர்தலை எதிர்த்து தொடர்ந்து நடைபெற்றுவரும் போராட்டங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. எனினும், தான்சானியாவில் இணையதள இணைப்பு முழுமையாக முடக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பான முழு விவரங்கள் வெளியாகாமல் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.