

கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டு தவறுதலாக 43 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுப்ரமணியம் வேதம் என்பவரை நாடு கடத்துவது அமெரிக்க நீதிமன்றங்களால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
64 வயதாகும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேதம், கடந்த 43 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் அவர் குற்றமற்றவர் என்று நீதிமன்றங்களால் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவிலிருந்து தனது பெற்றோருடன் வேதம் அமெரிக்காவுக்குள் சட்ட ரீதியாக நுழையும் போது அவர் 9 மாதக் குழந்தை. வேதத்தின் தந்தை, அங்கு ஆசிரியராகப் பணியாற்றினார்.
குடியுரிமை நீதிபதி, வேதத்தை நாடு கடத்தத் தடை விதித்திருப்பதோடு, கொலை வழக்கில் மேல்முறையீடு செய்யப்படுமா என்பது முடிவு செய்யப்படும் வரை அவரை நாடு கடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார். மேல்முறையீடு தொடர்பாக முடிவெடுக்க பல மாதங்கள் ஆகலாம். அதே நாளில், வேதத்தின் வழக்குரைஞர், பென்சில்வேனியா நீதிமன்றத்தில், அவரை நாடு கடத்த தடை உத்தரவையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேதத்தை அவரது உறவினர்கள் சுப்பு என்று அழைக்கிறார்கள். அவர் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக தங்கியிருக்க அனுமதி பெற்றவர் என்றும், அவர் கடந்த 1982ஆம் ஆண்டு கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவரதுடைய குடியுரிமை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் அவரது வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.
வேதம், கடந்த 1980ஆம் ஆண்டு தாமஸ் கின்சர் என்ற தன்னுடைய நண்பரைக் கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக சாட்சியங்களும், தடயங்களும் போதுமான அளவில் இல்லாதபோதம் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. தாமஸ் மரணமடைவதற்கு முன்பு கடைசியாக வேதத்துடன் இருந்தார் என்பதுதான் முக்கியக் குற்றச்சாட்டு.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில், வேதத்தின் வழக்குரைஞர், இந்த வழக்கில் இதுவரை வெளியிடப்படாத ஒரு ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து வேதம் குற்றமற்றவர் என நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். தீர்ப்பையடுத்து, அக். 3ஆம் தேதி வேதம் பென்சில்வேனியா சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். கடந்த 40 ஆண்டுகளாக, சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவோமா என காத்திருந்த வேதம், சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதும் நேராக குடியுரிமை அதிகாரிகள் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவர்கள் காவலில் வைக்கப்பட்டார்.
வேதம் தற்போது லூசியானாவில் உள்ள அலெக்ஸான்டிரியாவின் குறுகிய கால தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருப்பதாகவும், அங்கிருந்து நாடு நடத்துவதற்கான வழித்தடம் மிக அருகில் உள்ளதாகவும் அவரது உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுப்ரமணியம் வேதம், 20 வயதாக இருந்த போது, அவர் மீது போதைப் பொருள் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், அதன் கீழ் அவரை நாடு கடத்த குடியுரிமைத் துறை அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
கொலை வழக்கில் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால், போதைப் பொருள் வழக்கு இல்லாமல் ஆகிவிடாது. ஒரே ஒரு வழக்கில் குற்றமற்றவர் என்ற தகவல், அவரை நாடு கடத்துவதிலிருந்து காப்பாற்ற முடியாது என்றும் அதிகாரிகள் திட்டவட்டமாகக் கூறுகிறார்கள்.
ஆனால், தவறுதலாக ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்குதான் அவர் பட்டப்படிப்புகளை முடித்து மற்றவர்களுக்கும் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இவை எல்லாம் போதை வழக்குகளை நிராகரிக்கப் போதுமானவை அல்லவா என்று வழக்குரைஞர் வாதிடுகிறார்.
இது குறித்துப் பேசிய வேதத்தின் சகோதரி சரஸ்வதி வேதம், தற்போது குடும்பம் ஓரளவுக்கு நிம்மதி அடைந்திருப்பதாகவும், சுப்புவை நாடு கடத்துவதற்கு தடை விதிக்க நீதிபதி ஒப்புக் கொண்டுவிட்டார் என்றும் கூறுகிறார்.
சுப்புவை நாடு கடத்துவது என்பது, அவருக்கு இழைக்கப்படும் மற்றொரு அநீதியாக இருக்கும் என்று குடியுரிமைத் துறை ஒப்புக் கொள்ளும் என்று தாங்கள் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒன்பது மாதக் குழந்தையாக அமெரிக்காவுக்கு வந்தவர், அதுநாள் முதல் இங்குதான் வாழ்கிறார். கடந்த 43 ஆண்டுகள் செய்யாதக் குற்றத்துக்காக அவரை சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்று சரஸ்வதி வேதம் வேதனையோடு கூறுகிறார்.
இதையும் படிக்க... இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின் வாகனங்கள்! காரணம் என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.