
மாஸ்கோ: அமெரிக்க வரி விதிப்பால், இந்தியாவுக்கு ஏற்படும் இழப்புகளை, ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலம் சமப்படுத்தப்படும் என அதிபர் விளாதிமீர் புதின் கூறியுள்ளார்.
இந்தியா - ரஷியா இடையேயிருக்கும் வர்த்தக சமநிலையின்மை என்ற கடினமான போக்கை மாற்றுமாறும் அவர் அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி இந்தியா வரவிருக்கும் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தனது இந்திய வருகைக்கான எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.
இந்தியா, ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதைச் சுட்டிக் காட்டி அமெரிக்க அதிபா் டிரம்ப், இந்தியாவுக்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளாா். இதனால், இந்திய ஏற்றுமதி பாதிக்கப்படுள்ளது. இந்நிலையில், ரஷியாவுடனான இந்தியாவின் நெருக்கம் மேலும் அதிகரித்து, புதின் இந்தியா வருவது இருதரப்பு உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டுச்செல்லும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்திய-ரஷிய அரசுகளுக்கு இடையிலான குழு கூட்டம் மற்றும் ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு கூட்டம் ஆகியவை ரஷிய அதிபரின் வருகைக்கு முன்பு இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டங்களின்போது, இரு தரப்புக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு, புதின் இந்திய வருகையின்போது கையெழுத்தாகவிருக்கின்றன.
புது தில்லி, ரஷியாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால் இந்தியாவுடனான வர்த்தக ஏற்றத்தாழ்வைத் தணிக்க நடவடிக்கைகளை வகுக்குமாறு ரஷிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளார் விளாதிமீர் புதின்.
வியாழக்கிழமை மாலை தெற்கு ரஷியாவின் கருங்கடல் தீவுப் பகுதியான சோச்சியில் இந்தியா உள்பட 140 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் நிபுணர்களின் சர்வதேச வால்டாய் கலந்துரையாடல் கூட்டத்தில் புதின் கலந்து கொண்டு பேசினார்.
ரஷியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எந்தப் பிரச்னையோ அல்லது பதற்றமோ ஒருபோதும் இருந்ததில்லை என்று ரஷிய அதிபர் குறிப்பிட்டார்.
சோவியத் யூனியனின் காலத்திலிருந்தே, இந்தியா தனது சுதந்திரத்திற்காகப் போராடி வந்த காலத்திலிருந்தே ரஷியா-இந்தியா உறவுகள் சிறப்பாக இருந்தைதையும் இந்தியாவில், மக்கள் இதை நினைவில் கொள்கிறார்கள், அதை நன்கு அறிந்திருக்கிறார்கள், மேலும் அதை மதிக்கிறார்கள். இந்தியா அதை ஒருபோதும் மறக்கவில்லை என்பதை நாங்கள் பாராட்டுகிறோம் என்று புதின் எடுத்துரைத்தார்.
ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்த அமெரிக்காவின் அழுத்தத்தை புறக்கணிப்பது என்ற இந்திய முடிவு குறித்து பேசிய புதின், அமெரிக்காவின் வரி அழுத்தங்களால் இந்தியா எதிர்கொள்ளும் இழப்புகள் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியால் சமப்படுத்தப்படும், மேலும் அது ஒரு இறையாண்மை கொண்ட நாடாக கௌரவத்தைப் பெறும் என்றார்.
வர்த்தக ஏற்றத்தாழ்வை நீக்க, ரஷியா இந்தியாவிலிருந்து அதிக விவசாயப் பொருள்கள் மற்றும் மருந்துகளை வாங்கலாம் என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க.. பிறப்பால் குடியுரிமையை ரத்து செய்ய முடியாது: அமெரிக்க நீதிமன்றம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.