
இளைஞர்களிடையே தற்போது பரவிவரும் 'புளூடூத்திங்' எனும் ஆபத்தான புதுவகைப் பழக்கத்தால் ஒருசில நாடுகளில் ஹெச்ஐவி பாதிப்பு அதிகரித்து வருகிறது.
'புளூடூத்' பற்றி நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரியும். மின்னணு கருவிகளை வயர்லெஸ் தொழில்நுட்பம் மூலமாக இணைக்கப் பயன்படுவது. ஆனால் 'புளூடூத்திங்' பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இது பல்வேறு நாடுகளில் இளைஞர்களிடையே அண்மைக்காலமாக காணப்படும் மிக ஆபத்தான செயல்.
இளைஞர்கள் 'புளூடூத்திங்'கில் ஈடுபடுவதால் தென்னாப்பிரிக்கா, ஃபிஜி (தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு) உள்ளிட்ட நாடுகளில் ஹெச்ஐவி எனும் கொடிய தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
புளூடூத்திங் என்பது என்ன?
'புளூடூத்திங்' அல்லது 'ஹாட்ஸ்பாட்டிங்' என்பது இளைஞர்கள், ரத்தத்தை பரிமாறிக்கொள்வதின் மூலமாக போதைப் பொருளைப் பயன்படுத்தும் ஒரு நடைமுறை.
இளைஞர் ஒருவர் தனது உடலில் போதைப்பொருள் மருந்தை, ஊசியின் மூலமாகச் செலுத்திக்கொள்கிறார். இப்போது அவரது ரத்தத்தில் அந்த போதைப்பொருள் கலந்துவிடும். அந்த ரத்தத்தை எடுத்து மற்றோர் இளைஞர் எடுத்து தன்னுடைய உடலில் செலுத்திக்கொள்கிறார்.
பல்வேறு நாடுகளில் இளைஞர்களிடையே இந்த ட்ரென்ட் நடைமுறையில் இருக்கிறது. இது 'ஃபிளாஷ்ப்ளடிங்' என்றும் கூறப்படுகிறது.
அதிகம் பாதிப்புக்குள்ளான ஃபிஜி
இந்த ட்ரென்டினால் தென்னாப்பிரிக்கா, ஃபிஜி உள்ளிட்ட நாடுகளில் ஹெச்ஐவி பாதிப்பு அதிகரித்துள்ளது. 2014 - 2024- க்கு இடையில் 10 ஆண்டுகளில் ஃபிஜியில் ஹெச்ஐவி தொற்று பாதிப்பு கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்துள்ளது.
ஃபிஜியில் ஹெச்ஐவி அதிகரிக்க மற்றொரு காரணம், இளைஞர்கள் (பெரும்பாலும் ஓரினச் சேர்க்கையாளர்கள்) பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு முன்னும் பின்னும் போதை மருந்துகளை இந்த முறையில் பகிர்ந்துகொள்கின்றனர் எனக் கூறப்படுகிறது.
இளைஞர்களிடையே இருக்கும் இந்த ஆபத்தான போக்கு, உலகின் ஹெச்ஐவி பாதிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது என்றும் இதனைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்றும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஐ.நா.வின் கூற்றுப்படி ஃபிஜியில் 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 9 மாதங்களில் புதிதாக 1,093 பேருக்கு ஹெச்ஐவி தொற்று ஏற்பட்டுள்ளது. இவற்றில் 223 பாதிப்புகள், இளைஞர்கள் இதுபோன்று நரம்பு வழியாக போதை மருந்து பயன்படுத்தியதால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெறும் 500 ஆக இருந்த பாதிப்பு தற்போது 5,900 ஆக அதிகரித்துள்ளது. 2025 இறுதியில் மேலும் 3,000 பேருக்கு ஹெச்ஐவி ஏற்பட வாய்ப்புள்ளதாக பிஜி நாட்டு சுகாதார அமைச்சர் கூறுகிறார்.
இங்கு 10 வயது சிறுவன் ஒருவன் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளான். 19 வயதுக்குக் குறைவான சிறுவர்கள் பலரும் இந்த புளுடூத்திங் முறையில் சிக்கிக்கொண்டுள்ளதால் பெற்றோர்களுக்கு அவர்களை அதிலிருந்து மீட்பது பெரும் சவாலாக இருக்கிறது. ஃபிஜியில் 10 லட்சத்துக்கும் குறைவான மக்களே இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெகுசிலர் மட்டுமே ஹெச்ஐவி பரிசோதனை செய்ய வருவதாகவும் பெரும்பாலானோர் வருவதில்லை என்றும் அவ்வாறு பரிசோதனை செய்தால் பாதிப்பு மேலும் அதிகமாகவே இருக்கும் என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இளைஞர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள்?
இளைஞர்கள் புளூடூத்திங் செய்வதற்குப் போதைப் பொருள் பற்றாக்குறையும் ஊசி பற்றாக்குறையுமே காரணங்களாகக் கூறப்படுகின்றன.
போதைப்பொருள் தட்டுப்பாடு காரணமாக அதன் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
போதைப்பொருளை அதிக விலை கொடுத்து வாங்க முடியாத காரணத்தினால் இளைஞர்கள் அதனை வாங்கி இருவர் சேர்ந்து பகிர்ந்துகொள்கின்றனர். ஒருவர் போதை மருந்தை நரம்பின் வழியாக ரத்தத்தில் செலுத்திய பின்னர் அவரின் ரத்தத்தை எடுத்து மற்றொருவர் தன் உடலில் செலுத்திக்கொள்கிறார்கள். இந்த போதை மருந்துக்கான தொகையையும் இருவரும் பகிர்ந்துகொள்கிறார்கள்.
ஒன்றுக்கு மேற்பட்டோரும் போதைப்பொருள் கலந்த ஒருவரின் ரத்தத்தை பகிர்கிறார்கள். இதில் ஒருவருக்கு ஹெச்ஐவி இருந்தால் மற்றவருக்கு ரத்தத்தின் மூலமாகவோ அந்த ஊசியின் மூலமாகவோ பரவுகிறது.
தென் ஆப்பிரிக்கா, ஃபிஜி தவிர தான்சானியா, லெசோதோ (தென் ஆப்பிரிக்காவில் உள்ள நாடு), பாகிஸ்தான், தெற்காசியாவில் உள்ள சில பகுதிகளில் இந்த 'புளூடூத்திங்' வழி போதைப் பழக்கம் இருப்பதாக ஐ.நா. கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.