
ரஷிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவின் நடவடிக்கை மூலம் ரஷியாவுக்கு உலகளாவிய அழுத்தத்தை அதிகரிக்கும் முயற்சியில் பெரிய படியாக அமைந்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஓவல் அலுவலகத்தில் வன்முறை குற்றங்கள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்ட அதிபர் டிரம்ப் மற்றும் எஃப்.பி.ஐ. இயக்குநர் காஷ் படேல், பின்னர் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.
அப்போது, இந்தியாவை நம்பகமான கூட்டாளியாக பார்கிறீர்களா? என்ற ஏஎன்ஐ செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் கூறியதாவது:
”ஆம். பிரதமர் மோடி எனது நண்பர். எங்களுக்குள் சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷியாவின் எண்ணெய் வாங்குவதில் எனக்கு மகிழ்ச்சியில்லை. மேலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று என்னிடம் இன்று உறுதியளித்தார். சீனாவையும் இதனைச் செய்ய வைக்க வேண்டும்.
ரஷியா அபத்தமான போரைத் தொடர்கிறது. லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷியாவும் ராணுவ வீரர்கள் உள்பட லட்சக்கணக்கானோரை இழந்துள்ளது. இந்த போர் தொடங்கியிருக்கவே கூடாது. முதல் வாரத்திலேயே ரஷியா வெற்றி பெற்றிருக்க வேண்டியது, ஆனால், நான்காவது ஆண்டை அடைந்துள்ளார்கள். போர் நிறுத்தத்தை காண நான் விரும்புகிறேன். எனவே இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.
மத்திய கிழக்கில் கடந்த வாரம் நாங்கள் செய்ததை ஒப்பிடும்போது இது எளிதானது என்பது உங்களுக்கு தெரியும். அது 3,000 ஆண்டுகள் பிரச்னை. ஆனால், இது வெறும் 3 ஆண்டு போர் மட்டுமே.
நாங்கள் ரஷியா - உக்ரைன் போரை நிறுத்திக் காட்டுவோம். அதிபர் புதின் போரை நிறுத்துவார் என்று நினைக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.