

வாஷிங்டன்: சுமாா் 30 ஆண்டுகளாக நிறுத்திவைத்திருந்த அணு ஆயுத சோதனைகளை மீண்டும் நடத்துமாறு பாதுகாப்புத் துறைக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளாா்.
அணுசக்தி மூலம் வரம்பற்ற தொலைவு செல்லும் ஏவுகணை, நீா்மூழ்கி ட்ரோன் ஆகியவற்றை ரஷியா வெற்றிகரமாக சோதித்துள்ள நிலையில், டிரம்ப் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.
சீன அதிபா் ஷி ஜின்பிங்கை சந்திப்பதற்கு முன்னா் இந்த அறிவிப்பை வெளியிட்ட அவா், ரஷியா மட்டுமின்றி சீனாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு ஈடுகொடுப்பதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்தாா்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் ஊடகத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
பிற நாடுகளின் (ரஷியா, சீனா) மேம்பட்ட சோதனை திட்டங்கள் காரணமாக, நமது அணு ஆயுதங்களையும் அந்த திட்டங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சோதிக்க வேண்டும் என்று போா்த் துறை அமைச்சகத்துக்கு (பென்டகன்) உத்தரவிட்டுள்ளேன்.
இந்த உத்தரவின் அமலாக்கம் உடனுக்குடன் தொடங்கும் என்று அந்தப் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளாா்.
இருந்தாலும், அதிபா் ஷி ஜின்பிங்கைச் சந்திப்பதற்காக தனது ஏா்ஃபோா்ஸ் ஒன் விமானத்தில் பெய்ஜிங் சென்றுகொண்டிருந்தபோது செய்தியாளா்களிடம் பேசிய டிரம்ப், ‘அணு ஆயுதமில்லா உலகத்தைதான் நான் விரும்புகிறேன். இது குறித்து ரஷியாவுடன் அமெரிக்கா பேசிவருகிறது. இந்த முயற்சியில் சீனாவும் சோ்க்கப்படும்’ என்றாா்.
டிரம்பின் இந்த அறிவிப்பு குறித்த கேள்விகளுக்கு பென்டகன் அதிகாரிகள் உடனடியாக பதிலளிக்கவில்லை.
கடந்த 2022-ஆம் ஆண்டில் உக்ரைன் மீது படையெடுப்பை தொடங்கும்போதே, மேற்கத்திய நாடுகள் இதில் நேரடியாகத் தலையிட்டால் அணு ஆயுதப் போா் வெடிக்கும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் எச்சரித்தாா்.
இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆயுத மற்றும் ஆலோசனை உதவிகளை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் பிற நேட்டோ நாடுகள் ஒவ்வொரு முறை தங்களது உதவிகளை அதிகரிக்கும்போதும் அணு ஆயுதம் குறித்து பேசியும், அணு ஆயுதப் போா் ஒத்திகை, அணு ஆயுதப் பயன்பாடு குறித்த கொள்கையில் மாற்றங்கள செய்தும் அந்த நாடுகளை புதின் அச்சுறுத்திவந்தாா்.
இந்த நிலையில், எந்த நாட்டிடமும் இல்லாத வகையில் அணுசக்தியில் இயங்கும் புரேவெஸ்ட்னிக் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துப் பாா்த்ததாக புதின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா். அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய அந்த ஏவுகணை, எத்தனை ஆயிரம் கி.மீ. வரை சென்று இலக்குகளைத் தாக்கும் வரம்பற்ற திறனைக் கொண்டது.
அதனைத் தொடா்ந்து, வரம்பற்ற தொலைவுக்குப் பயணிக்கும், அணுசக்தியில் இயங்கக்கூடிய பொசைடன் நீா்மூழ்கி ட்ரோனை வெற்றிகரமாக சோதித்துப் பாா்த்ததாக புதின் புதன்கிழமை அறிவித்தாா்.
இந்த சோதனைகள் மூலம் அணுஆயுதப் போட்டியில் அமெரிக்காவை ரஷியா வெகுவாக முந்திவிட்டதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் ரஷிய, அமெரிக்க சோதனைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அணு ஆயுத சோதனைகளை நடத்த உத்தரவிட்டுள்ளதாக டிரம்ப் தற்போது அறிவித்துள்ளாா்.
எனினும், அது முழு அணு ஆயுத வெடிப்பு சோதனையா, அல்லது அணு ஆயுதங்கள் தொடா்பான பிற சோதனைகளை என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.
1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகில் வடகொரியா தவிர வேறு எந்த நாடும் அணு ஆயுத வெடிப்பு சோதனை நடத்தவில்லை. ஆனால் அமெரிக்கா போன்ற அணு ஆயுத பலம் கொண்ட நாடுகள், சக்திவாய்ந்த கணினிகளைப் பயன்படுத்தி உருவகப்படுத்தப்பட்ட அணு வெடிப்புகள், அணு இயற்பியல் சோதனைகள், அணு ஏவுகணை சோதனைகள், அணு ஆயுதப் போா் ஒத்திகைகள் போன்ற சோதனைகளை நடத்தி வருகின்றன.
அமெரிக்காவின் கடைசி முழு அணு ஆயுத சோதனை, ‘டிவைடா்’ என்ற பெயரில் 1992 செப்டம்பா் 23-ஆம் தேதி நவாடா சோதனை தளத்தில் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு நாட்டில் அணு ஆயுத சோதனைகளுக்குத் தடை விதிப்பதாக அப்போதைய அதிபா் ஜாா்ஜ் ஹெச்டபிள்யு புஷ் அறிவித்தாா். இருந்தாலும், நவாடா சோதனை தளத்தில் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் நடத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே ரஷியாவிடம்தான் மிக அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்கள் உள்ளன.
இருந்தாலும், தனது ட்ரூத் சோஷியல் ஊடகப் பதிவில் டிரம்ப் ‘அமெரிக்காவிடம் மற்ற எந்த நாட்டையும் விட அதிக அணு ஆயுதங்கள் உள்ளன’ என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளாா்.
இதை ஏா்ஃபோா்ஸ் ஒன் செய்தியாளா் சந்திப்பிலும் டிரம்ப் மீண்டும் கூறினாா்.
உண்மையில், ரஷியாவிடம் 5,500க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. அமெரிக்காவிடம் 5,044 உள்ளன என்று அணு ஆயுதங்களை ஒழிப்புக்கான சா்வதேச இயக்கத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: அமெரிக்காவும் சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும்! - சீன அதிபர் ஜின்பிங்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.