

உலக அளவில் போதைப் பொருள்களின் தயாரிப்பு மற்றும் கடத்தல் அதிகமுள்ளதாக, அமெரிக்க அதிபா் டிரம்ப் வெளியிட்ட பட்டியலில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்பட 23 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இந்த நாடுகள், அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளன என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபா் டிரம்ப் சமா்ப்பித்த தீா்மானத்தில், ‘உலக அளவில் சட்டவிரோத போதைப் பொருள்களின் தயாரிப்பு மற்றும் கடத்தலில் முக்கிய பங்கு வகிக்கும் 23 நாடுகளை அடையாளம் கண்டுள்ளேன்.
ஆப்கானிஸ்தான், பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, பா்மா, சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, டொமினிகன் குடியரசு, ஈகுவடாா், எல் சால்வடாா், கெளதமாலா, ஹைதி, ஹோண்டுராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்ஸிகோ, நிகரகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு, வெனிசூலா ஆகிய 23 நாடுகளும் அமெரிக்காவுக்கான போதைப் பொருள் கடத்தலுக்கு காரணமானவை’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மேலும், ‘சா்வதேச ஒப்பந்தங்களின்கீழ் போதைப் பொருள் தடுப்பு முயற்சிகளை மேம்படுத்துவதில் ஆப்கானிஸ்தான், பொலிவியா, பா்மா, கொலம்பியா, வெனிசூலா ஆகிய 5 நாடுகளும் தோல்வி கண்டுவிட்டன; போதைப் பொருளுக்கான மூலப்பொருள் விநியோகத்தில் உலகின் மிகப் பெரிய ஆதாரம் சீனா. மூலப்பொருள் விநியோகத்தை தடுக்கவும் குற்றவாளிகளைக் கைது செய்யவும் சீனத் தலைமை வலுவான-நிலையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்’ என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.,
இதனிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அளித்த விளக்கத்தில், ‘இப்பட்டியலில் இடம்பெற்ாலேயே, ஒரு நாட்டின் அரசுத் தரப்பில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றோ, அமெரிக்காவுக்கு அந்நாட்டு அரசு ஒத்துழைக்கவில்லை என்றோ கூறிவிட முடியாது.
தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக இருந்தாலும், போதைப் பொருள் தயாரிப்பு-கடத்தலுக்கு சாதகமாக உள்ள புவியியல், வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.