ஐரோப்பிய விமான நிலையங்கள் மீது சைபர் தாக்குதல்! 3-வது நாளாக விமான சேவை பாதிப்பு!

ஐரோப்பிய விமான நிலையங்கள் மீது சைபர் தாக்குதல் நடந்துள்ளது பற்றி...
Brussels Airport
பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்...AP
Published on
Updated on
2 min read

பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய விமான நிலையங்கள் மீதான சைபர் தாக்குதலால் அங்கு விமான சேவை இன்று 3-வது நாளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுதும் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகள் வருகை(செக்-இன்) மற்றும் விமான புறப்பாடு(போர்டிங்)க்கான தொழில்நுட்ப சேவையை அமெரிக்க விமானப் போக்குவரத்து நிறுவனமான 'காலின்ஸ் ஏரோஸ்பேஸ்' வழங்கி வருகிறது.

இந்நிலையில் 'காலின்ஸ் ஏரோஸ்பேஸ்' தளத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை(செப். 19) சைபர் தாக்குதல் நடந்துள்ளது. பிரிட்டன் நாட்டின் லண்டனில் உள்ள ஹீத்ரோ, ஜெர்மனியின் பெர்லினில் உள்ள பிரண்டன்பர்க், பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் உள்பட பல ஐரோப்பிய நாடுகளின் முக்கிய விமான சேவைக்கான மென்பொருள் தளம் பாதிக்கப்பட்டதால் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

தொடர்ந்து இன்றும் 3-வது நாளாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் இருந்து இன்று(திங்கள்கிழமை) புறப்படவிருந்த 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோல சனிக்கிழமை 25 விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை 50 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சில விமான நிலையங்களில் வருகை, லக்கேஜ் விவரங்களை கைகளில் எழுதி கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் அல்லது மடிக்கணினி பயன்படுத்தப்பட்டதன் அடிப்படையில் விமானங்கள் இயங்கி வருகின்றன. இதற்கும் நடைமுறைகள் மெதுவாக நடைபெறுவதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

'காலின்ஸ் ஏரோஸ்பேஸ்' தளம் முழுவதுமாக தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சைபர் தாக்குதலுக்குப் பின்னால் இருப்பது யார் என இதுவரை தெரியவில்லை, ஆனால் இதன் பின்னணியில் ஹேக்கர்கள், குற்றவியல் அமைப்புகள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சைபர் பாதுகாப்பு நிறுவனம், இது மூன்றாம் தரப்பினரின் சைபர் தாக்குதல் என்று உறுதி செய்துள்ளதுடன் இதுகுறித்து சட்ட அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

Summary

Airport cyberattack disrupts more flights across Europe

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com