
பாகிஸ்தான் பலூசிஸ்தானில் உள்ள துணை ராணுவத்தின் தலைமையகத்தை குறிவைத்து தற்கொலைப் படை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் செவ்வாய்க்கிழமை 10 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், இந்த சம்பவத்தில் 30 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் நிலவுவதாக பலூசிஸ்தான் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் நான்கு துணை ராணுவப் படைப் பிரிவுகளில் ஒன்றான ஃப்ரண்டியர் கார்ப்ஸின் தலைமையகம் அமைந்துள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை காரில் வந்த 6 பயங்கரவாதிகள், ஃப்ரண்டியர் கார்ப்ஸ் தலைமையகத்துக்கு உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர்.
பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்திய நிலையில், காரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் மூன்று துணை ராணுவப் படை வீரர்கள் உள்பட 10 பேர் பலியாகினர். 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கார் வெடிகுண்டு தாக்குதலால், சில கிலோ மீட்டர் தூரத்துக்கு பயங்கர அதிர்வு ஏற்பட்டுள்ளது. அருகிலிருந்த கார்கள், வீடுகளின் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளது.
இந்த தாக்குதல் நடத்திய 6 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஷின் நக்வி தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை, இருப்பினும், பலூச் விடுதலை அமைப்பு தாக்குதல் நடத்தியிருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் குவெட்டா அருகேவுள்ள மைதானத்துக்கு வெளியே, அரசியல் கட்சியினர் நடத்திய பேரணியின் மனித வெடிகுண்டை வெடிக்கச் செய்து 13 பேரை கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.