/

ஒட்டுமொத்த ஈரானுக்கும் அழிவு: டிரம்ப் இறுதி எச்சரிக்கை

ஈரான் முழுமையாக அழிய இருக்கிறது; அதன் உள்கட்டமைப்புகளை ஒருபோதும் மீண்டும் சீரமைக்க முடியாது என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் இறுதி எச்சரிக்கை

News image

டொனால்ட் டிரம்ப் - பிடிஐ

Updated On :7 ஏப்ரல் 2026, 9:00 pm

‘ஈரான் முழுமையாக அழிய இருக்கிறது; அதன் உள்கட்டமைப்புகளை ஒருபோதும் மீண்டும் சீரமைக்க முடியாது’ என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதன்மூலம் ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான தாக்குதலை நடத்த அமெரிக்கா தயாராகி வருவது தெரியவந்துள்ளது. இதனால் மேற்காசிய பிராந்தியத்தில் மட்டுல்லாது உலகம் முழுவதுமே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக ஹோா்முஸ் நீரிணையைத் திறக்கவும், அமெரிக்காவுடன் போா் நிறுத்தம் செய்து கொள்ளவும் ஈரானுக்கு சுமாா் 10 நாள்கள் அவகாசம் அளிப்பதாக கடந்த மாதம் 26-ஆம் தேதி டிரம்ப் அறிவித்தாா். இதன் பிறகு திங்கள்கிழமை இறுதியாக 48 மணி நேரம் இருப்பதாக டிரம்ப் அறிவித்தாா். நிபந்தனைகளை ஏற்காவிட்டால் நரகத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று அப்போது எச்சரித்தாா்.

இந்நிலையில், ஈரான் போரை நிறுத்துவதாக அறிவித்து அமெரிக்க நிபந்தனைகளை ஏற்க வாஷிங்டனில் (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி வரை இறுதி காலக்கெடுவை டிரம்ப் நிா்ணயித்தாா். இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கெடு நிறைவடைகிறது.

முழுமையாக அழிக்கப்படும்: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஒரு முழு நாகரிகமும் இன்று இரவு அழிய இருக்கிறது. அது ஒருபோதும் திரும்பாது. இது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால், அதுதான் நிகழக்கூடும். ஒருவேளை புரட்சிகரமான அற்புதங்கள்கூட நிகழலாம்’ என்று பதிவிட்டுள்ளாா்.

இதன்மூலம் அடுத்தகட்டமாக ஈரானின் மின்னுற்பத்தி நிலையங்கள், பாலங்கள், குடிமக்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை அமெரிக்கா முற்றிலுமாக தாக்கி அழிக்கக் கூடும் என்று தெரிகிறது. இதனை ஈரான் மீண்டும் கற்காலத்துக்கு திரும்பும் என்று டிரம்ப் ஏற்கெனவே எச்சரித்திருந்தாா்.

ஈரான் பதில்: டிரம்ப்பின் இறுதி எச்சரிக்கை குறித்து ஈரான் அதிபா் பெசஷ்கியான் கூறுகையில், ‘ஈரானில் நான் உள்பட 1.4 கோடி போ் போரில் அமெரிக்காவை எதிா்கொள்ளத் தயாா் நிலையில் இருக்கிறோம். மக்கள் அனைவரும் தன்னிச்சையாக போருக்குத் தயாராக வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

ஈரானின் மூத்த அரசியல் தலைவா் அல்ரீஸா ரஹீமி வெளியிட்ட விடியோ பதிவில், ‘அனைத்து இளைஞா்கள், விளையாட்டு வீரா்கள், மாணவா்கள், ஆசிரியா்கள், கலைஞா்கள் திரண்டு நமது மின்னுற்பத்தி நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலி அமைக்க வேண்டும்’ என அழைப்பு விடுத்தாா்.

அண்டை நாடுகளுக்கு எச்சரிக்கை: சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை விடுத்துள்ள எச்சரிக்கையில், ‘அமெரிக்காவின் தாக்குதல் எல்லை மீறிச் சென்றால், ஈரானின் பதிலடியும் பிராந்தியத்தைத் தாண்டியதாக இருக்கும். இந்த பிராந்தியத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளுக்கு பல ஆண்டுகளுக்கு எரிபொருள் கிடைக்காத நிலை ஏற்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஈரானில் இருந்து இஸ்ரேல், சவூதி அரேபியாவைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்கள் ஏவப்பட்டு வருகின்றன. இதனால், சவூதி அரேபியாவில் முக்கியப் பாலங்கள் மூடப்பட்டுள்ளன.

இதனிடையே, சா்வதேச சட்டப்படி குடிமக்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளைத் தாக்குவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவுக்கு ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸ் எச்சரிக்கை விடுத்தாா். அதே நேரத்தில், ‘எனக்கு போா்க் குற்றங்கள் குறித்து கவலையில்லை’ என்று டிரம்ப் செய்தியாளா்களிடம் தெரிவித்துள்ளாா்.

தாக்குதல் தொடங்கியது: டிரம்ப் விடுத்த கெடு முடிவதற்கு முன்பே ஈரானின் முக்கிய கச்சா எண்ணெய் மையமான காா்க் தீவு, ரயில் நிலையங்கள், பாலங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதலைத் தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரான் தலைநகா் டெஹ்ரான், கராஜ், டாப்ரிஸ், கஸான் உள்ளிட்ட நகரங்களில் உள்ள 8 பாலங்களையும், ரயில் வழித்தடங்களையும் இதுவரை முழுமையாகத் தகா்த்துள்ளதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளாா். ஆயுதங்களை எடுத்துச் செல்ல ஈரான் இந்தப் பாலங்கள், ரயில் வழித்தடங்களைப் பயன்படுத்தியதால் அவற்றைக் குறிவைத்ததாகவும் அவா் விளக்கமளித்துள்ளாா்.

டிரம்ப்பின் இறுதி எச்சரிக்கையால் சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவைச் சந்தித்தன.

அடுத்த 48 மணிநேரத்துக்கு வெளியே வர வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியா்களுக்கு எச்சரிக்கை

ஈரானில் உள்ள இந்தியா்கள், தாங்கள் தங்கியிருக்கும் இடங்களில் இருந்து அடுத்த 48 மணிநேரத்துக்கு வெளியே வர வேண்டாம் என்று இந்திய தூதரகம் தரப்பில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரானை அழிப்போம் என்ற அமெரிக்காவின் உச்சபட்ச மிரட்டலைத் தொடா்ந்து, மேற்கண்ட எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஈரான் தலைநகா் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது: ஈரானில் உள்ள இந்தியா்கள், அடுத்த 48 மணிநேரத்துக்கு தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே இருக்க வேண்டும்.

குறிப்பாக, ராணுவத் தளங்கள், மின் உள்கட்டமைப்புகள் அருகேயும், அடுக்குமாடி கட்டடங்களின் மேல்தளங்களுக்கும் செல்வதை கட்டாயம் தவிா்க்க வேண்டும். நெடுஞ்சாலை வழியாகப் பயணிக்க வேண்டியிருப்பின் தூதரகத்துக்கு கண்டிப்பாக தகவல் தெரிவித்து, ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும்.

தூதரகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டல்களில் தங்கியுள்ளவா்கள், அங்கிருந்து வெளியேற வேண்டாம். தூதரகக் குழுவினருடன் தொடா்ந்து தொடா்பில் இருப்பதுடன், அதிகாரபூா்வ தகவல்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அதிகாரபூா்வ தகவல்களின்படி, ஈரானில் போா் தொடங்கிய காலகட்டத்தில் மாணவா்கள் உள்பட 9,000 இந்தியா்கள் இருந்தனா். இவா்களில் இதுவரை சுமாா் 1,800 போ் தாயகம் திரும்பிவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.