இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை அமைப்பான ’மொஸாட்’-ன் புதிய தலைவராக ரோமன் கோஃப்மேன் நியமனம்.
இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறை அமைப்பான ’மொஸாட்’-ன் புதிய தலைவராக மேஜர் ஜெனரல் ரோமன் கோஃப்மேன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் அரசின் ஆலோசனைக் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு பிரதமர் நெதன்யாகு இவரைத் தலைவராக நியமித்தார்.
இஸ்ரேல் அரசின் முன்னாள் உச்சநீதிமன்றத் தலைவர் தலைமையிலான குழுவால் அங்கிகரிக்கப்பட்ட இந்த முடிவை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் அதிபர் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார். கோஃப்மேன் துணிச்சலான, சமயோசித புத்தியுடன் செயல்படும் சிறந்த அதிகாரி என்று நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ராணுவச் செயலாளராக பணியாற்றி வரும் கோஃப்மேன் ஜூலை 2, 2026 அன்று உளவுத்துறை தலைவராகப் பதவியேற்கவுள்ளார். அடுத்த ஐந்தாண்டு காலம் அவர் இந்தப் பதவியில் இருப்பார் என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்துடன் தற்போதைய தலைவர் டேவிட் பார்னியா பதவிக்காலம் முடிந்தபின் இவர் பதவியேற்பார்.
இஸ்ரேலைச் சுற்றி பதற்றமான சூழல் நிலவுவதால் உளவுத்துறை பெரும் சவால்களை சந்தித்து வரும் வேளையில் இவரது பணி நியமன உத்தரவு வெளியாகியுள்ளது. இராணுவ உத்தரவுகளை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகித்த கோஃப்மேன் நெதன்யாகுவுக்கு நெருங்கியவராகக் கருதப்படுகிறார். இவர் பல்வேறு சூழல்களில் நெதன்யாகுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பணியைச் செய்துள்ளார்.
பெலாரஸில் பிறந்த கோஃப்மேன் இஸ்ரேலில் 1990 ஆம் ஆண்டு தனது 14-வது வயதில் குடியேறினார். இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் கவசப் பிரிவில் பணியாற்றி படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று ராணுவப் படையின் ஒரு பிரிவுக்கு தளபதியாக செயல்பட்டார். பின்னர் ராணுவச் செயலாளராக பணியாற்றினார்.
இஸ்ரேல் மீது அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலில், தஸிலீம் பயிற்சித் தளத்திற்கு கோஃப்மேன் தலைமை தாங்கினார். அப்போது காசா எல்லைக்கு விரைந்த அவர், அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் படுகாயம் அடைந்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், ஹமாஸின் தோல்வியைத் தொடர்ந்து காசா பகுதியில் இஸ்ரேலின் இராணுவக் கட்டுப்பாடு தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டின் மூலம் கோஃப்மேன் கவனம் ஈர்த்தார். இது பெரும் விவாதமாக மாறியது குறிப்பிடத்தக்கது.
Summary
Netanyahu picks close aide Roman Gofman as Mossad director
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










