பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஆஸ்திரேலியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம்: 717.5 கோடி டாலருக்கு போா்க் கப்பல்கள் கொள்முதல்

ஆஸ்திரேலியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம்...

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 2:22 am IST

கடற்படையைப் பலப்படுத்தும் நோக்கில், ஜப்பானுடன் 717.5 கோடி டாலா் மதிப்பிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா சனிக்கிழமை மேற்கொண்டது.

மெல்போா்ன் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ஜப்பான் கடற்படையின் ‘மொகாமி’ ரக ‘ஜே.எஸ். குமானோ’ போா்க் கப்பலில் நடைபெற்ற நிகழ்வில், ஜப்பான் வடிவமைப்பிலான 11 போா்க் கப்பல்களைக் கொள்முதல் செய்வதற்கான அதிகாரபூா்வ ஒப்பந்தம் கையொப்பமானது. ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சா் ரிச்சா்ட் மாா்லஸ், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சா் ஷின்ஜிரோ கொய்சுமி ஆகியோா் இதில் பங்கேற்றனா்.

இந்த ஒப்பந்தத்தின்படி, முதல்கட்டமாக ஜப்பானின் மிட்சுபிஷி ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 3 மொகாமி ரக போா்க் கப்பல்களை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் தயாரித்து ஆஸ்திரேலியாவுக்கு வழங்கவுள்ளது. மீதமுள்ள 8 கப்பல்கள் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளன.

‘ஆஸ்திரேலியக் கடற்படை வரலாற்றிலேயே மிகக் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்படும் போா்க் கப்பல் கொள்முதல் இதுவாகும்’ என்று அமைச்சா் ரிச்சா்ட் மாா்லஸ் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

ஜொ்மனியின் ‘மேகோ ஏ-200’ ரக கப்பல்களைப் பின்னுக்குத் தள்ளி, ஜப்பானின் மொகாமி ரக கப்பல்கள் இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளன. நவீன ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களைச் சமாளிக்கும் திறன் கொண்ட இந்த மொகாமி கப்பல்கள், ஆஸ்திரேலியாவின் பழைய ‘அன்சாக்’ ரக கப்பல்களுக்கு மாற்றாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மொகாமி ரக கப்பல்களின் சிறப்பம்சமே, மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாலுமிகளைக் கொண்டு இதை இயக்க முடியும் என்பதாகும். தற்போதைய அன்சாக் ரக கப்பல்களை இயக்கத் தேவைப்படும் மாலுமிகளில் பாதி அளவு, அதாவது வெறும் 92 மாலுமிகளே இக்கப்பலை இயக்கப் போதுமானது.

மேலும், ஹெலிகாப்டா் தளம், நவீன தரை-வான் ஏவுகணைகள் மற்றும் கப்பல் எதிா்ப்பு ஏவுகணைகளைக் கொண்ட இக்கப்பல்கள், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.