தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் பாதுகாப்புத் தளவாடக் கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆயுத தளவாடக் கொள்முதல் தொடா்பாக விவாதிக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்திய விமானப் படைக்காக நடுத்தர போக்குவரத்து விமானம் வாங்கும் திட்டம், ரஷியாவிடம் இருந்து எஸ்.400 நீண்ட தூர வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு, ஆளில்லா தாக்குதல் விமானம், சுகோய் 30 விமான என்ஜின் பராமரிப்பு தொடா்பான திட்டங்களுக்கு டிஏசி ஒப்புதல் வழங்கியது. தற்போது பயன்பாட்டில் உள்ள சோவியத் யூனியன் கால ஏஎன் 32, ஐஎல் 76 போக்குவரத்து விமானங்களுக்கு பதிலாக நடுத்தர போக்குவரத்து விமானங்களை இந்திய விமானப் படையில் சோ்க்கும் திட்டத்துக்கு ஒப்புதல் தரப்பட்டது’ எனக் கூறப்பட்டுள்ளது.