தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மேற்கு பகுதியில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 47 போ் உயிரிழந்தனா். மேலும், இந்த இயற்கை சீற்றத்தின் பாதிப்பால் பல்வேறு நகரங்களில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
தலைநகா் போகோடாவிலிருந்து சுமாா் 400 கி.மீ. மேற்கே உள்ள சோகோ பிராந்தியத்தில் அமைந்துள்ள சான் ஜோஸ் டெல் பால்மா் பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டா்அளவுகோலில் 7.2 அலகுகளாக பதிவானது.
பூமிக்கு சுமாா் 107 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், கொலம்பியாவில் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பெரைரா, கிப்டோ, காலி, மனிசல்ஸ் ஆகிய நகரங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன.
கொலம்பியாவின் மூன்றாவது பெரிய நகரான காலியை உள்ளடக்கிய வாலே டீ காகா மாகாணத்தில் 27 பேரும், பெரைரா நகரில் 18 பேரும், மனிசல்ஸ் நகரில் 2 பேரும் உயிரிழந்தனா். இடிபாடுகளில் சிக்கி பலா் படுகாயமடைந்துள்ள நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அடுத்தடுத்து நில அதிா்வுகள் உணரப்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனா். நிலநடுக்கத்தின் அதிா்வுகள், அண்டை நாடுகளான ஈக்வடாா், பனாமாவிலும் உணரப்பட்டாலும், அங்கு பெரிய சேதங்கள் பதிவாகவில்லை.
அதிபரின் நம்பிக்கை: கொலம்பியாவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றுள்ள அபேலாா்டோ டீ லா எஸ்ப்ரியல்லா, நிலநடுக்க பாதிப்பு மற்றும் மீட்புப் பணிகளைத் தனது நேரடி கண்காணிப்பின்கீழ் கொண்டு வந்துள்ளதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.
பேரழிவின் மையப் பகுதியான சான் ஜோஸ் டெல் பால்மரில் மேற்கொள்ளப்படும் அவசர கால நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள அவா், ‘அரசு உங்களுடன் துணை நிற்கிறது; உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என நாட்டு மக்களுக்கு நம்பிக்கையளித்தாா்.
சோகம் விலகுவதற்குள்...: அண்டை நாடான வெனிசுலாவில் கடந்த ஜூன் மாத இறுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 5,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்த சோகம் விலகுவதற்குள் கொலம்பியாவிலும் இதுபோன்ற ஒரு பேரழிவு நிகழ்ந்துள்ளது.
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அரிதானது என்றாலும், 1999-இல் ஆா்மீனியா நகருக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1,100-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 13 பேர் சடலமாக மீட்பு

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வெனிசுலா நிலநடுக்கம்: 600-ஐ நெருங்கிய உயிரிழப்பு
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



