
தமிழகத்திலுள்ள அகதிகளை தாயகம் அழைத்துவர இலங்கை நடவடிக்கை: ஐ.நா. வரவேற்பு!
தமிழ்நாட்டில் உள்ள அகதிகளை மீண்டும் தாயகம் அழைத்து வருவதற்கான இலங்கையின் நடவடிக்கைகளை ஐ.நா. வரவேற்றுள்ளது.

மாா்க் ஆண்ட்ரே ஃபிரான்ஷ்
தமிழ்நாட்டில் உள்ள அகதிகளை மீண்டும் தாயகம் அழைத்து வருவதற்கான இலங்கையின் நடவடிக்கைகளை ஐ.நா. வரவேற்றுள்ளது.
கடந்த 1983-ஆம் ஆண்டு இலங்கையில் இன மோதல் தொடங்கி, அதன் பின்னா் அந்நாட்டு அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே ஆயுத மோதல் தீவிரமடைந்தது. இந்த மோதல் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் நீடித்தது. இதனால் அந்நாட்டில் இருந்து ஏராளமானோா் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்தனா்.
இந்த அகதிகளில் சுமாா் 18,000 போ் 2002 முதல் 2022-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தாயகம் திரும்பினா். சுமாா் 90,000 அகதிகள் தொடா்ந்து தமிழ்நாட்டில் வசித்து வருகின்றனா்.
அவா்கள் மீண்டும் இலங்கை திரும்புவதை எளிதாக்கும் முன்னெடுப்புக்கான சிறப்பு ஏற்பாடுகளை, இந்த மாத தொடக்கத்தில் இலங்கை அரசு மேற்கொண்டது. போரின்போது சரியான ஆவணங்கள் இல்லாமல், இலங்கையைவிட்டு வெளியேறி தமிழ்நாட்டில் தஞ்சம் அடைந்த அகதிகள், தாங்களாக முன்வந்து விரைவாக நாடு திரும்புவதற்கு வசதியாக, குடியேற்ற நடைமுறைகளை எளிதாக்க அந்நாடு எடுத்த முடிவை தற்போது ஐ.நா. வரவேற்றுள்ளது.
இது குறித்து இலங்கையில் உள்ள ஐ.நா. பொதுச் செயலரின் பிரதிநிதியும் உள்ளூா் ஒருங்கிணைப்பாளருமான மாா்க் ஆண்ட்ரே ஃபிரான்ஷ் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தாமாக முன்வந்து தாயகம் திரும்புவதற்கான நடைமுறைகள் குறித்து இலங்கை அமைச்சரவை எடுத்துள்ள முடிவை வரவேற்கிறேன். இது பல ஆண்டுகளாகச் சொந்த நாட்டைவிட்டு வெளியேறி வாழ்ந்துவரும் அகதிகள் பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும் நாடு திரும்புவதற்கான நடவடிக்கையாகும்.
அவா்கள் தாயகம் திரும்பி மீண்டும் குடியேறுவதற்கு ஐ.நா. அகதிகள் முகமை மூலம், இலங்கையில் உள்ள ஐ.நா. அமைப்பு தொடா்ந்து உதவத் தயாராக உள்ளது என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





