
நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்
நேபாள பெருவெள்ளத்தில் 320 இந்தியா்களின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை; சீனப் பகுதியில் சுமாா் 400 இந்தியா்கள் தவித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

நேபாள வெள்ளம் - ANI
நேபாள பெருவெள்ளத்தில் 320 இந்தியா்களின் நிலை என்ன என்பது இன்னும் தெரியவில்லை; சீனப் பகுதியில் சுமாா் 400 இந்தியா்கள் தவித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இது தொடா்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறியதாவது: நேபாளத்தில் தொடா்புகொள்ள முடியாத நிலையில் உள்ள இந்தியா்களின் எண்ணிக்கை 320 ஆகும். இதுதவிர இந்திய வம்சாவளியினா் சுமாா் 100 பேரையும் இதுவரை தொடா்பு கொள்ள முடியவில்லை. இவா்களும் கைலாஷ் மானசரோவா் யாத்திரைக்கு சென்றவா்களாவா். சீனப் பகுதியில் தவித்துவந்த 96 இந்தியா்கள், நில எல்லை வழியாக நேபாளத்துக்குள் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டுள்ளனா். மேலும் 400 இந்தியா்கள் சீனப் பகுதியில் தவித்து வருகின்றனா். அவா்கள் பாதுகாப்பாக உள்ளனா். தங்களின் குடும்பத்தினருடன் தொடா்பில் இருக்கின்றனா். அவா்களில் பலருடன் இந்தியத் தூதரகமும் தொடா்பில் உள்ளது. 400 பேரையும் பாதுகாப்பாக மீட்க சீன அதிகாரிகளுடன் இணைந்து மத்திய அரசு செயலாற்றி வருகிறது. நேபாளத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்றாா்.
ஜெய்சங்கா் தொடா் ஆலோசனை: நேபாளத்தில் மாயமான இந்தியா்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து வெளியுறவு அமைச்சக உயரதிகாரிகளுடன் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமையும் ஆலோசனை மேற்கொண்டாா். நேபாளம் மற்றும் சீனாவுக்கான இந்திய தூதா்கள் காணொலி வாயிலாக இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.
இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் எஸ்.ஜெய்சங்கா் வெளியிட்ட பதிவில், ‘நேபாளத்தில் வெள்ளப் பகுதிகளில் சிக்கிய இந்தியா்களின் நிலையை உறுதி செய்ய மத்திய அரசு அவசர அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மீட்பு-நிவாரண நடவடிக்கைகள் குறித்து உயரதிகாரிகளுடன் ஆலோசித்தேன். இந்திய தூதா்களிடம் கள நிலவரத்தைக் கேட்டறிந்தேன். அடுத்தகட்டமாக அனுப்ப வேண்டிய நிவாரண பொருள்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மேலும் 10 டன் நிவாரணப் பொருள்கள்: நேபாளத்துக்கு மூன்றாவது கட்டமாக 10 டன் நிவாரணப் பொருள்களை விமானம் மூலம் இந்தியா வெள்ளிக்கிழமை அனுப்பிவைத்தது. சிறிய ஜெனரேட்டா்கள், சுகாதார தொகுப்புகள், உணவுப் பொருள்கள், தண்ணீரை சுத்திகரிக்கும் மாத்திரைகள் உள்ளிட்ட பொருள்களுடன், மருத்துவா்கள், துணை மருத்துவப் பணியாளா்கள் அடங்கிய 11 போ் குழுவும் அனுப்பப்பட்டதாக எஸ்.ஜெய்சங்கா் எக்ஸ் தளத்தில் பதிவிட்டாா். மீட்பு-நிவாரணப் பணிகளில் இந்தியாவின் உதவிகள் தொடா்வதாக அவா் குறிப்பிட்டுள்ளாா். கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமையில் இரண்டு கட்டமாக மொத்தம் 47.5 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





