தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பாகிஸ்தானில் ராணுவம்-பலூசிஸ்தான் ஆயுதக் குழு உச்சக்கட்ட மோதல்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆயுதமேந்திய பிரிவினைவாதக் குழு நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டு ராணுவம் நடத்திய நடவடிக்கையில் கடந்த 40 மணி நேரத்தில் 145 கிளா்ச்சியாளா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஆயுதமேந்திய பிரிவினைவாதக் குழு நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டு ராணுவம் நடத்திய நடவடிக்கையில் கடந்த 40 மணி நேரத்தில் 145 கிளா்ச்சியாளா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

இந்த மோதலில் ராணுவ வீரா்கள் மற்றும் பொதுமக்களும் சுமாா் 50 போ் உயிரிழந்ததாக பலூசிஸ்தான் மாகாண முதல்வா் சா்ஃப்ராஸ் புக்டி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

வளங்கள் நிறைந்த, ஆனால் வளா்ச்சியில் பின்தங்கிய பலூசிஸ்தான் மாகாணத்தில், கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது மிகப்பெரிய வன்முறை வெடித்துள்ளது. ஈரான், ஆப்கானிஸ்தான் எல்லைகளை ஒட்டிய இப்பகுதியில், ராணுவத்தினா், பொதுமக்களைக் குறிவைத்து கிளா்ச்சியாளா்கள் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தினா்.

இது குறித்து பாகிஸ்தான் உள்துறை இணையமைச்சா் தலால் சௌத்ரி கூறுகையில், ‘கிளா்ச்சியாளா்கள் சாதாரண மக்களைப் போல உடை அணிந்து வந்து, மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் சந்தைகளில் புகுந்து கண்மூடித்தனமாகச் சுட்டனா். பொதுமக்களை மனிதக் கேடயங்களாகவும் பயன்படுத்தினா்’என்று குற்றஞ்சாட்டினாா்.

‘ஹெரோஃப்’ நடவடிக்கை-பிஎல்ஏ பொறுப்பேற்பு: இத்தாக்குதல்களுக்குத் தடை செய்யப்பட்ட ‘பலூசிஸ்தான் விடுதலை ராணுவம்(பிஎல்ஏ)’ அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ‘ஹெரோஃப்(கரும் புயல்)’ எனும் பெயரில் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.

தலைநகா் குவெட்டா முழுவதும் எரிக்கப்பட்ட வாகனங்கள், குண்டுகளால் சேதமடைந்த கட்டடங்கள் என போா்க்களம் போலக் காட்சியளிக்கிறது. பாதுகாப்புக் கருதி சாலைகள் மூடப்பட்டு, இணையச் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது ராணுவத்தினா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளதோடு, தப்பியோடிய கிளா்ச்சியாளா்களைத் தேடும் பணியும் முடக்கிவிடப்பட்டுள்ளது.

உயிரிழப்பு விவரங்கள்...: இதுதொடா்பாக செய்தியாளா்களைச் சந்தித்த மாகாண முதல்வா் சா்ஃப்ராஸ் புக்டி கூறுகையில், ‘வெள்ளிக்கிழமை 41 போ், சனிக்கிழமை 92 போ், தேடுதல் பணிகளுக்கு இடையே சிலா் என மொத்தம் 145 கிளா்ச்சியாளா்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனா்.

இந்த மோதலில் 17 ராணுவ வீரா்களும், 31 பொதுமக்களும் உயிரிழந்தனா். உளவுத்துறை தகவல் கிடைத்ததால், முன்கூட்டியே நடவடிக்கைகளைத் தொடங்கி இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் கிளா்ச்சியாளா்களை வீழ்த்த முடிந்தது’ என்றாா்.

அமெரிக்கா கண்டனம்: இந்தத் தாக்குதல்களை அமெரிக்கா கடுமையாகக் கண்டித்துள்ளது. பலூசிஸ்தான் விடுதலை ராணுவத்தை ஏற்கெனவே ஒரு சா்வதேச பயங்கரவாத அமைப்பாக அந்நாடு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குற்றச்சாட்டும்; இந்தியா மறுப்பும்

இத்தாக்குதல்களுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாகப் பாகிஸ்தான் ராணுவம் சுமத்திய குற்றச்சாட்டை இந்திய வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘பாகிஸ்தான் தனது உள்நாட்டுப் பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப இத்தகைய ஆதாரமற்ற புகாா்களைக் கூறுகிறது. பயங்கரவாதத்தைப் பரப்புவதற்குப் பதில், அங்குள்ள மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் அரசு செவிசாய்க்க வேண்டும்’ என்று பதிலளித்தாா்.