

கீவ் : சுமாா் 4 ஆண்டுகளாக நீடிக்கும் ரஷியா-உக்ரைன் போரில் வரும் ஜூன் மாதத்துக்குள் தீா்வுக் காண அமெரிக்கா கெடு விதித்துள்ள நிலையில், ரஷிய படைகளின் வான் வழி தாக்குதல்கள் தொடர்ந்தன.
ஞாயிற்றுக்கிழமை(பிப். 8) அதிகாலையில் டொனெட்ஸ்க் பகுதியில் க்ராமடார்ஸ்க் நகரில், குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து ரஷிய படைகள் நடத்திய வான் வழி தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்ததாகவும் உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர். அந்நகரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், 9 மாடி அடுக்குமாடிக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற உக்ரேனிய அவசரகால சேவைப் பிரிவினர் தீயைப் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
போல்டோவா பகுதியில் அமைந்துள்ள எரிசக்தி கட்டுமானம் ஒன்றும் ரஷியாவின் வான் வழி தாக்குதல்கலில் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர் காலத்தில் உக்ரேனிய மின் ஆற்றல் நிலையங்களைக் குறிவைத்து தாக்கும் ரஷியாவின் யுக்தி, குளிர் காலத்தை ஆயுதமாக அவர்கள் பயன்படுத்தி, உக்ரைனை அடிபணிய வைக்க முயற்சிப்பதையே காட்டுவதாக உக்ரேனிய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
டான்பாஸ் பகுதியிலிருந்து வெளியேறுமாறு உக்ரைனுக்கு ரஷியா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. டான்பாஸ் நிலத்தை விட்டுத்தரப்போவதில்லை என்பதில் உக்ரைன் உறுதியாக இருப்பதால் அப்பகுதியில் சண்டை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின் மத்தியஸ்த முன்னெடுப்பை ஏற்றுக்கொண்டு மேற்கண்ட இரு தரப்பும் ஜூனுக்குள் சமரசம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.