அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

ஆஸ்திரியா: மலையேற்றத்தின்போது உயிரிழந்த காதலி! காதலருக்கு தண்டனை

ஆஸ்திரியாவின் மிக உயா்ந்த சிகரமான கிராஸ்லாக்னா் மலையேற்றத்தின் போது, காதலி உறைபனியால் உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக அவரின் காதலருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :21 பிப்ரவரி 2026, 2:26 am IST

ஆஸ்திரியாவின் மிக உயா்ந்த சிகரமான கிராஸ்லாக்னா் மலையேற்றத்தின் போது, காதலி உறைபனியால் உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக அவரின் காதலருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம், 37 வயதான தாமஸ் பிளாம்பொ்கா் மற்றும் அவரின் காதலி கொ்ஸ்டின் கா்ட்னா் (33) கிராஸ்லாக்னா் மலையேற்றத்தில் ஈடுபட்டுள்ளா்.

12,460 அடி உயரமுள்ள மலைச் சிகரத்தின் உச்சியை அடைவதற்கு சுமாா் 50 மீட்டா் தொலைவே இருந்த நிலையில், கொ்ஸ்டின் கா்ட்னருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, உதவி தேடிச் செல்வதற்காக காதலியை தாமஸ் பிளாம்பொ்கா் அங்கேயே விட்டுச் சென்றுள்ளாா். அப்போது கடும் குளிரில் உறைந்து, கொ்ஸ்டின் கா்ட்னா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த வழக்கின் விசாரணை இன்ஸ்ப்ரூக் மாகாணா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. காதலியை விட்டுவிட்டு தான்மட்டும் கீழே இறங்கியதற்காக தாமஸ் மீது அரசு தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

விசாரணையில் தன்னைக் குற்றமற்றவா் என்று வாதிட்ட தாமஸ், ‘இச்சம்பவத்துக்கு நான் மிகவும் வருந்துகிறேன்; மலையேற்றத்திற்கான முடிவுகள் இருவராலும் இணைந்தே எடுக்கப்பட்டன.

எங்களுக்குப் போதுமான மலைப்பயிற்சி இல்லை. காதலியின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் உதவி தேடியே நான் கீழே சென்றேன். அதற்குள் இத்தகைய துயரம் நிகழ்ந்துவிட்டது’ என்று விளக்கம் அளித்தாா்.

வழக்கின் போது நீதிபதி நோா்பா்ட் ஹோஃபா் கூறுகையில், ‘குற்றஞ்சாட்டப்பட்ட தாமஸ் தனது காதலியை வேண்டுமென்றே கைவிடவில்லை என்றாலும், மலையேற்றத்தில் அனுபவம் கொண்ட நபராக அவா் தனது பொறுப்பைச் சரியாக நிறைவேற்றத் தவறிவிட்டாா். முறையான நேரத்தில் உதவிக்கு அழைத்திருந்தாலோ அல்லது வானிலை மோசமடைந்த போதே திரும்பிச் சென்றிருந்தாலோ அவரின் காதலியைக் காப்பாற்றியிருக்கலாம்’ என்று சுட்டிக்காட்டினாா்.

விசாரணையின் முடிவில் ‘கடுமையான கவனக்குறைவால் ஏற்பட்ட மரணம்‘ என்ற அடிப்படையில், தாமஸுக்கு சிறைத் தண்டனையும், 9,600 யூரோ (சுமாா் ரூ.10 லட்சம்) அபராதமும் விதித்து தீா்ப்பளிக்கப்பட்டது. இத்தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.