

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, பூலோக நரகம் என்றழைக்கப்படும் மிகக் கொடூர சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாகவும் பல நாள்களாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்த அவர், அமெரிக்காவுக்கு கடல் வழியாக போதைப் பொருள்கள் கடத்திவரும் கப்பல்களையும் தாக்கி அழிக்க உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், ஜன. 3 ஆம் தேதி காலை வெனிசுவேலாவின் தலைநகர் காரகஸ் உள்ளிட்டப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக அத்துமீறி வான்வெளித் தாக்குதலைத் தொடர்ந்தது.
அங்கு தாக்குதல் நடத்தியது மட்டுமின்றி, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ்ஸையும் அமெரிக்க படைகள் கைது செய்து, நாடுகடத்தி அமெரிக்காவின் நியூயாா்க் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தியது. அவர்கள் மீது போதைப் பொருள் பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் சதி, ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கைகள் கட்டப்பட்ட நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மதுரோ நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டார். அவர் குற்றமற்றவர் என்று கூறி ஜாமீன் கோரினார். இருப்பினும், மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறையில் அடைக்க உத்தரவிட்ட நீதிபதி, மார்ச் மாதம் 13 ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
பூலோக நரகம்
இந்த நிலையில், அதிபர் மதுரோ நியூ யார்க்கில் இருக்கும் ப்ரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மான்ஹாட்டன் மற்றும் ப்ரூக்ளினில் உள்ள நீதிமன்றங்களில் விசாரணைக்காக காத்திருக்கும் கைதிகள் வழக்கமாக இந்த சிறையில் அடைக்கப்படுவர். பிரபல பாடகர்களான ஆர் கெல்லி, டிட்டி என்றழைக்கப்படும் சீன் கோம்ஸ் உள்ளிட்டோரும் இந்தச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
‘பூலோக நரகம்’ (Hell On Earth - ஹெல் ஆன் எர்த்) என்று அழைக்கப்படும் இந்தச் சிறை, வன்முறை, சுகாதாரமின்மை மற்றும் அடிப்படை வசதிகள்கூட இல்லாத நரகத்திற்கு இணையான இடமாகக் கருதப்படுகிறது. நியூ யார்க் சுதந்திர தேவியின் சிலை அருகே அமைந்துள்ள இந்த சிறையில் பிற கைதிகளால் மதுரோவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அவருக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒருநாளில் சுமார் 23 மணி நேரம் மிகவும் குறுகிய அளவிலான, ஒளி இல்லாத அறையில் மதுரோ அடைத்து வைக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும், இங்கிருக்கும் கைதிகள் மிகக் கொடிய செயல்களில் ஈடுபட்டவர்களாகவும், இவர்களால் மதுரோவின் உயிருக்கு பல வகைகளில் ஆபத்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1990 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்தச் சிறை மெட்ரோபாலிட்டன் டிடென்ஷன் சென்டர் - எம்டிசி ப்ரூக்ளின் சிறை என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. இந்த சிறையில் 1,300 பேர் வரை அடைத்து வைக்க முடியும். வெள்ளை காலர் குற்றங்களில் ஈடுபடுவோர், போதைப் பொருள் கடத்துவோர், கேங்க்ஸ்டர்கள் பலரும் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு நாட்டின் அதிபர் இந்த சிறையில் அடைத்து வைக்கப்படுவது இது முதல்முறை அல்ல; ஹோண்டுராஸின் முன்னாள் அதிபரான ஜுவான் ஓர்லாண்டோ, பல்லாயிரம் டன் கொக்கைனை அமெரிக்காவுக்கு கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, விசாரணையின் போது இந்த சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். பின்னர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு அவருக்கு 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த டிசம்பரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பொது மன்னிப்பு காரணமாக விடுவிக்கப்பட்டார்.
மெக்சிகோவின் போதைப் பொருள் கடத்தல் மன்னன் எல் மாயோ சம்பாடா கார்சியா, யுனைட்டட் ஹெல்த்கேர் தலைமை நிர்வாக அதிகாரியை கொலை செய்த லுய்கி மான்கிஒன் உள்ளிட்டோரும் தற்போது இந்தச் சிறையில் உள்ளனர்.
2024 ஆம் ஆண்டில் சிறைக் கைதிகள் இருவரால், ஒரு கைதி கொல்லப்பட்டார். தொடரும் வன்முறைகள் குறித்து வழக்குரைஞர்கள் பலர் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
முன்னதாக, 2019 ஆம் ஆண்டில், மின் தடை காரணமாக இந்த சிறை ஒரு வாரம் இருளில் மூழ்கிக் கிடந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.