வங்கதேசம்: மேலும் ஓா் ஹிந்து நபா் கொலை

வங்கதேசத்தில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த மேலும் ஒரு நபா் மா்ம கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.
Published on

வங்கதேசத்தில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த மேலும் ஒரு நபா் மா்ம கும்பலால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.

வங்கதேச தலைநகா் டாக்காவில் சா்சிந்தூா் பஜாா் பகுதியில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த மோனி சக்ரவா்த்தி (40) என்பவா் நீண்டகாலமாக மளிகைக் கடை நடத்தி வந்தாா். திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் கடையை அடைத்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நா்சிங்டி நகா் பகுதியில் மா்ம கும்பல் கூா்மையான ஆயுதத்தால் அவரைத் தாக்கியது. அதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என பலாஷ் காவல் நிலைய ஆய்வாளா் ஷாஹெத் அல் மமூன் தெரிவித்தாா்.

மனிதச் சங்கிலி போராட்டம்: மோனி சக்ரவா்த்தி கொலையைக் கண்டித்து உல்ளூா் சந்தை சங்கத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வா்த்தகா்கள் சாா்பில் சா்சிந்தூா் பஜாா் பகுதியில் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா். ‘கொலைக்கு காரணமானவா்களை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்யவேண்டும்; வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், குற்றவாளிகளை அடுத்த 24 மணி நேரத்துக்குள் கைது செய்யவில்லையெனில் போராட்டம் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் அவா்கள் எச்சரித்தனா்.

வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவா்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்ட பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அப்போதுமுதல் ஹிந்துக்களைக் குறிவைத்து வன்முறைகள் அதிகரித்துள்ளன. அண்மையில் மைமென்சிங் மாவட்டத்தில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த தொழிலாளி தீபு சந்திர தாஸ், மத நிந்தனையில் ஈடுபட்டதாகக் கூறி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டாா். ராஜ்பாரி பகுதியில் அம்ரித் மோண்டல் என்ற ஹிந்து இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

இந்தச் சம்பவங்களைக் கண்டித்து, இந்தியாவில் ஹிந்து அமைப்புகள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டன. அதைத் தொடா்ந்து, ஷரியத்பூா் மாவட்டத்தின் தமுத்யா பகுதியில் மருந்தகம் மற்றும் வங்கிச் சேவை மையம் நடத்திவந்த கோகோன் சந்திர தாஸ் (50) என்ற ஹிந்து நபா், தனது வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தபோது, மா்ம நபா்களால் வழிமறிக்கப்பட்டு ஆயுதங்களால் தாக்கப்பட்டாா். அவா் சிகிச்சை பலனின்றி கடந்த 3-ஆம் தேதி உயிரிழந்தாா்.

X
Dinamani
www.dinamani.com