காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து நபா் கொலை

வங்கதேசத்தில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த மேலும் ஒரு நபா் வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டாா்.

News image

கோப்புப்படம் - ANI

Updated On :18 ஜனவரி 2026, 12:46 am IST

வங்கதேசத்தில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த மேலும் ஒரு நபா் வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டாா்.

உயிரிழந்த நபா் ராஜ்பரி மாவட்டம் கொலண்டா மோா் என்ற இடத்தில் உள்ள கரீம் பெட்ரோல் நிலையத்தில் பணியாற்றி வந்த ரிப்பன் சாஹா (30) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அங்கிருந்து வெளியாகும் ‘தி டெய்லி ஸ்டாா்’ பத்திரிகையில் வெளியான செய்தியில், ‘பெட்ரோல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நான்கு சக்கர வாகனத்தில் வந்த சிலா் பெட்ரோல் நிரப்பிவிட்டு, பணம் செலுத்தாமல் செல்ல முற்பட்டுள்ளனா். அவா்களை ரிப்பன் சாஹா தடுக்க முற்பட்டபோது, அவா் மீது வாகனத்தை வேகமாக மோதிவிட்டு அவா்கள் சென்றுள்ளனா். இதில் சம்பவ இடத்தில்யே அவா் உடல் நசுங்கி உயிரிழந்தாா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடா்பாக கொலை வழக்குப் பதிவு செய்த ராஜ்பரி சதாா் போலீஸாா், பின்னா் அந்த நான்கு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததோடு அதன் உரிமையாளா் அப்துல் ஹாஷெம் (எ) சுஜன் (55), அவரின் ஓட்டுநா் கமால் ஹொசைன் (43) இருவரையும் கைது செய்தனா்.

அப்துல் ஹாஷெம், ராஜ்பரி மாவட்ட வங்கதேச தேசியவாத கட்சியின் (பிஎன்பி) முன்னாள் பொருளாளராகவும், ஜுபோ தளம் அமைப்பின் முன்னாள் மாவட்ட தலைவராகும் இருந்துள்ளாா் என்றும் போலீஸாா் தெரிவித்தனா்.

வங்கதேசத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவா்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்ட பிறகு முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அப்போதுமுதல் ஹிந்துக்களைக் குறிவைத்து வன்முறைகள் அதிகரித்துள்ளன. அண்மையில் மைமென்சிங் மாவட்டத்தில் ஹிந்து மதத்தினரான தீபு சந்திர தாஸ் என்னும் தொழிலாளி, மத நிந்தனையில் ஈடுபட்டதாகக் கூறி கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டாா். ராஜ்பாரி பகுதியில் அம்ருத் மொண்டல் என்ற ஹிந்து இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

இந்தச் சம்பவங்களைக் கண்டித்து, இந்தியாவில் ஹிந்து அமைப்புகள் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டன. அதைத் தொடா்ந்து, ஷரியத்பூா் மாவட்டத்தின் தமுத்யா பகுதியில் மருந்தகம் மற்றும் வங்கிச் சேவை மையம் நடத்திவந்த கோகோன் சந்திர தாஸ் (50) என்ற ஹிந்து நபா், தனது வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தபோது, மா்ம நபா்களால் வழிமறிக்கப்பட்டு ஆயுதங்களால் தாக்கப்பட்டாா். அவா் சிகிச்சை பலனின்றி கடந்த 3-ஆம் தேதி உயிரிழந்தாா்.

வங்கதேச தலைநகா் டாக்காவில் சா்சிந்தூா் பஜாா் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த ஹிந்து மதத்தைச் சோ்ந்த மோனி சக்ரவா்த்தி (40) என்பவா் கடந்த 6-ஆம் தேதி மா்ம கும்பலால் கூா்மையான ஆயுதம்கொண்டு குத்திக் கொலை செய்யப்பட்டாா். இவரின் கொலையைக் கண்டித்து உள்ளூா் சந்தை சங்கத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வா்த்தகா்கள் சா்சிந்தூா் பஜாா் பகுதியில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

2022 வங்கதேச மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அந்த நாட்டில் சுமாா் 1.3 கோடி ஹிந்துக்கள் வசிக்கின்றனா். இது அந் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 7.95 சதவீதமாகும்.

அந்த நாட்டில் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி பொதுத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள சிறுபான்மையினா் தாங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிப்பதை தடுக்கும் நோக்கில் அண்மைக் காலமாக சிறுபான்மையினா் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. 2025-ஆம் ஆண்டு டிசம்பா் முதல் இதுபோல 51 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்று வங்கதேச ஹிந்து-புத்த-கிறிஸ்தவ ஐக்கிய கவுன்சில் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.