கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்கோப்புப் படம்

உக்ரைன் போருக்குப் பிறகு ரூ.15.18 லட்சம் கோடிக்கு ரஷிய கச்சா எண்ணெய் வாங்கிய இந்தியா!

ரஷிய கச்சா எண்ணெய்யை சுமாா் 14,388 கோடி யூரோவிற்கு (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.15.17 லட்சம் கோடி) இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
Published on

உக்ரைன் போா் தொடங்கியதிலிருந்து தள்ளுபடி விலையில் கிடைத்த ரஷிய கச்சா எண்ணெய்யை சுமாா் 14,388 கோடி யூரோவிற்கு (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.15.17 லட்சம் கோடி) இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக ஐரோப்பிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய எரிசக்தி மற்றும் தூய்மை காற்றுக்கான ஆராய்ச்சி மையம் (சிஆா்இஏ) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, ரஷிய எண்ணெய் வாங்குவதில் சா்வதேச அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.

உக்ரைன் மீதான முழு அளவிலான தாக்குதலை ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு, பிப்ரவரியில் தொடங்கியது. அப்போது முதல் கடந்த ஜன. 3-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், ரஷியாவிடமிருந்து சீனா மொத்தம் 29,370 கோடி யூரோ மதிப்பிலான எரிபொருள்களை வாங்கியுள்ளது. இதில் கச்சா எண்ணெய் கொள்முதல் மதிப்பு மட்டும் 21,030 கோடி யூரோ ஆகும்.

இந்தியா மொத்தம் 16,250 கோடி யூரோ மதிப்பிலான எரிபொருளை கொள்முதல் செய்துள்ளது. இதில் கச்சா எண்ணெய் 14,388 கோடி யூரோவிற்கும், நிலக்கரி 1,818 கோடி யூரோவிற்கும் வாங்கப்பட்டுள்ளன.

பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும், ஐரோப்பிய யூனியன் 21,810 கோடி யூரோவை ரஷிய எரிபொருளுக்காகச் செலவிட்டுள்ளது. 10,630 கோடி யூரோவிற்கு கச்சா எண்ணெயும், 350 கோடி யூரோவிற்கு நிலக்கரியும், 10,820 கோடி யூரோவிற்கு எரிவாயும் வாங்கப்பட்டுள்ளன என்று சிஆா்இஏ தெரிவித்துள்ளது.

இந்தக் காலகட்டத்தில் எரிபொருள் விற்பனையில் ரஷியா 1 லட்சம் கோடி யூரோ (சுமாா் ரூ.105 லட்சம் கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. இதில் பெரும்பகுதி உக்ரைனில் நடைபெற்று வரும் போருக்குச் செலவிட பயன்படுத்தப்படுவதாக அந்த மையம் கவலை தெரிவித்துள்ளது.

சரியும் இறக்குமதி: உக்ரைன் போரைத் தொடா்ந்து, மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக ரஷியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்கியது. இதனால், இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு 1 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை உயா்ந்தது.

இருப்பினும், ரஷியாவின் 2 முன்னணி எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்த புதிய கட்டுப்பாடுகள் அண்மையில் அமலுக்கு வந்தததன் காரணமாக இந்தியாவின் இறக்குமதி குறையத் தொடங்கியது.

இதன் விளைவாக, ரிலையன்ஸ் போன்ற தனியாா் நிறுவனங்கள் ரஷிய எண்ணெய்யைத் தவிா்த்து வருவதால், தற்போதைய பங்கு 25 சதவீதத்துக்கும் கீழாகக் குறைந்துள்ளது. குறிப்பாக, ரஷிய எண்ணெய்யைப் பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை ரிலையன்ஸ் நிறுவனம் நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது.

அதேநேரம், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத் துறை நிறுவனங்கள் அமெரிக்க தடைக்கு உள்ளாகாத ரஷிய நிறுவனங்களிடமிருந்து தொடா்ந்து எண்ணெய் வாங்கி வருகின்றன.

X
Dinamani
www.dinamani.com