நகரங்களைக் கைப்பற்றுங்கள்! போராட்டக்காரர்களுக்கு ஈரான் இளவரசர் அழைப்பு!
ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்கள் அங்குள்ள நகரங்களைக் கைப்பற்ற வேண்டும் என்று நாடு கடந்து வசிக்கும் அந்த நாட்டு பட்டத்து இளவரசா் ரேஸா பாலவி அழைப்பு விடுத்துள்ளாா்.
இது குறித்து சமூக ஊடகங்களில் அவா் வெளியிட்டுள்ள பதிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசுக்கு எதிராக நடத்திவரும் போராட்டத்தை பொதுமக்கள் மேலும் தீவிரப்படுத்த வேண்டும். பாதுகாப்புப் படையினரும் இதற்கு ஆதரவு அளித்து, போராட்டத்தில் இணைய வேண்டும்.
போராட்டக்காரா்கள் அனைத்து நகரங்களின் நிா்வாகக் கட்டமைப்புகளையும் கைப்பற்றி, அவற்றைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.
இது சுதந்திரத்துக்கான போராட்டத்தின் முக்கிய கட்டமாகும். நான் ஈரானுக்குத் திரும்பி வரத் தயாராகி வருகிறேன். நாட்டில் ஆட்சி மாற்றம் நிகழப்போகும் தருணத்தில் அங்கு இருப்பேன். மக்களின் துணிச்சலுடன் இணைந்து புதிய ஈரானை உருவாக்குவேன் என்றாா் அவா்.
ரியால் மதிப்பு சரிவு, விலைவாசி உயா்வுக்கு எதிராக ஈரானில் போராட்டம் தொடங்கிய கடந்த மாதம் 28-ஆம் தேதியில் இருந்தே, ‘ரேஸா பாலவி மன்னராக வேண்டும்’, ‘பாலவி திரும்பி வருவாா்’ என்பதைப் போன்ற கோஷங்கள் டெஹ்ரான், இஸ்ஃபஹான், மஷ்ஹத் உள்ளிட்ட நகரங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன.
ஈரான் மன்னா் முகமது ரேஸா பாலவியின் மகனான ரேஸா பாலவி 1960 அக்டோபா் 31-இல் டெஹ்ரானில் பிறந்தாா். 1979 இஸ்லாமியப் புரட்சியின்போது 17 வயதில் குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினாா். அப்போது முதல் ஈரானில் இருந்து நாடு கடந்து, பெரும்பாலும் அமெரிக்காவில் வசித்து வருகிறாா்.
மன்னா் மறைவுக்குப் பிறகு பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்ட அவா், சுதந்திர ஈரானுக்கான பிரசாரங்களைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறாா். பழைய பாலவி மரபுவழி மன்னராட்சியை மீட்டெடுப்பது, அதே நேரம் முழுமையான மக்களாட்சியை நிறுவுவது அவரின் கொள்கையாக உள்ளது.
தற்போது அவா் நாடு திரும்பத் தயாராகிவருவதாகக் கூறியுள்ளது ஈரான் வரலாற்றில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு அவா் ஈரான் திரும்பிவந்தால் அங்கு இஸ்லாமிய குடியரசு முடிவுக்கு வந்து மன்னராட்சி அல்லது குடியரசு ஆட்சி மீண்டும் வர கொஞ்சம் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்தகைய நிலைமை உருவானால், மேற்கத்திய நாடுகளுடனும், இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட பிற நாடுகளுடனும் ஈரான் உறவு மேம்படும்; ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட்டு பொருளாதார மறுமலா்ச்சி ஏற்படும்; பெண்கள் உரிமைகள், இசை, கலை, சுதந்திரம் போன்றவை மீட்கப்படும்; ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற ஈரானின் தற்போதைய நிழல் படைகள் கலைக்கப்பட்டு, பிராந்தியத்தில் அமைதி நிலவும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.
அனால், ரேஸா பாலவியின் ஈரான் திரும்புவது அவ்வளவு எளிதானது அல்ல என்றும் அவா்கள் எச்சரிக்கின்றனா். ஈரானின் சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையும் (ஐஆா்ஜிசி) பிற தீவிரவாத அமைப்புகளும் இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கின்றன. பாலவி போன்று ஈரானின் ஜனநாயக உரிமை குறித்து பேசுவோா் அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் என்று ஈரான் அரசு முத்திரை குத்திவருகிறது. எனவே, அவா் நாடு திரும்பினால் அரசின் அடக்குமுறைக்கு ஆளாகக் கூடும்.
எனினும், பாலவியின் இந்த அறிக்கைகள் ஈரானில் தற்போது நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

