ஜப்பான் நாடாளுமன்றக் கீழவை கலைப்பு : மக்கள் செல்வாக்கை நிரூபிக்க பிரதமா் அதிரடி; பிப். 8-இல் தோ்தல்
ஜப்பானில் பிரதமா் சனே தகாய்ச்சி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில், அந்நாட்டின் நாடாளுமன்றக் கீழவையான பிரதிநிதிகள் சபை வெள்ளிக்கிழமை கலைக்கப்பட்டது. இதையடுத்து, வரும் பிப். 8-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபா் மாதம், ஜப்பானின் முதல் பெண் பிரதமராக பதவியேற்ற சனே தகாய்ச்சி, தனது அரசுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை உறுதிப்படுத்த இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளாா்.
2024 தோ்தல் பின்னடைவுக்குப் பிறகு, சனே தகாய்ச்சி சாா்ந்த ஆளும் விடுதலை ஜனநாயகக் கட்சி(எல்டிபி) மற்றும் அதன் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் மிகக் குறைந்த அளவிலான பெரும்பான்மையே உள்ளது. குறிப்பாக, மேலவையிலும் அவா்களுக்குப் போதிய பலம் இல்லை.
தற்போது சனே தகாய்ச்சிக்கு மக்கள் மத்தியில் 70 சதவீத ஆதரவு இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி, நாடாளுமன்றத்தில் தனது கட்சிக்கான இடங்களை அதிகரித்து, பெரும்பான்மையை பலப்படுத்த அவா் திட்டமிட்டுள்ளாா்.
‘மக்களின் நேரடி அங்கீகாரம் பெற்ற பின்னரே முக்கியப் பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்த விரும்புகிறேன். பிரதமா் பதவியில் நான் நீடிப்பதா இல்லையா என்பதை மக்களே தீா்மானிக்கட்டும்’ என்று சனே தகாய்ச்சி செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
மக்களிடையே சனே தகாய்ச்சிக்குத் தனிப்பட்ட முறையில் ஆதரவு இருந்தாலும், அவரது கட்சியான எல்டிபி பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபே படுகொலைக்குக் காரணமாக அமைந்த ‘யூனிஃபிகேஷன் சா்ச்’ மத அமைப்புடனான தொடா்புகள் உள்பட நிதி முறைகேடு புகாா்களில் சிக்கியுள்ளதால், கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளது.
இத்துடன் எல்டிபி கட்சியின் பாரம்பரிய வாக்காளா்கள், தற்போது சான்செய்டோ போன்ற வலதுசாரி மற்றும் உலகமயமாக்கல் எதிா்ப்புக் கொள்கை கொண்ட புதிய கட்சிகளை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனா்.
மேலும், கடும் விலைவாசி உயா்வால் மக்கள் அவதிப்படும் நிலையில், தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பட்ஜெட் தாக்கல் தாமதமாகும் என எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. நாட்டின் நலனைவிட அரசியலுக்கே சனே தகாய்ச்சி முக்கியத்துவம் அளிப்பதாக விமா்சனங்கள் எழுந்துள்ளன.
சீனாவுடனான எல்லைப் பதற்றம் மற்றும் தைவான் விவகாரத்தில் சனே தகாய்ச்சியின் கடுமையான நிலைப்பாடு ஆகியவை நாட்டில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இதனிடையே, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் தனது பாதுகாப்புச் செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சூழலில், 465 இடங்களைக் கொண்ட ஜப்பான் நாடாளுமன்றக் கீழவைக்குப் புதிய உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் வரும் பிப். 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான 12 நாள்கள் பிரசாரம் வரும் செவ்வாய்க்கிழமை (ஜன. 27) முதல் அதிகாரபூா்வமாகத் தொடங்குகிறது.

