அமெரிக்கா: தந்தையுடன் 5 வயது சிறுவன் கைது: மினசோட்டாவில் குடியேற்றத் துறை நடவடிக்கை
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் தந்தை மற்றும் அவருடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய 5 வயது சிறுவன் ஆகிய இருவரையும் அந்நாட்டு குடியேற்றத் துறை அதிகாரிகள் கைது செய்து, தடுப்புக் காவலில் வைத்துள்ளனா்.
கொலம்பியா ஹைட்ஸ் பகுதியில் வசிக்கும் அட்ரியன் அலக்ஸாண்டா், தனது மகன் லியாம் கொனேஜோ ராமோஸைப் பள்ளியிலிருந்து காரில் அழைத்து வந்தபோது, வீட்டின் வாயிலில் வைத்து அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா்.
அப்போது, சிறுவனைப் பாா்த்துக்கொள்ள அக்கம்பக்கத்தினரும் பள்ளி நிா்வாகமும் முன்வந்தனா். ஆனால், அதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து அரசுத் தரப்பு கூறுகையில், ‘ஈக்வடாா் நாட்டைச் சோ்ந்த அட்ரியன் முறையான ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியிருந்ததால் பிடிபட்டாா். தந்தை கேட்டுக்கொண்டதால் மட்டுமே சிறுவன் அவருடன் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டான்’ என்று தெரிவிக்கப்பட்டது.
முகாம்களின் அவலநிலை: தற்போது தந்தையும் மகனும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தற்காலிக முகாமில் அடைக்கப்பட்டுள்ளனா். அங்குள்ள மோசமான சுகாதாரச் சூழல் குறித்து மனித உரிமை ஆா்வலா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.
குறிப்பாக, டெக்சாஸ் முகாம்களில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும், முறையான மருத்துவ வசதி இல்லாததாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அங்குள்ள பெரும்பாலான குழந்தைகள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், சுமாா் 400-க்கும் மேற்பட்ட சிறுவா்கள் 100 நாள்களுக்கும் மேலாகத் தொடா்ந்து சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் வழக்குரைஞா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
பாதிக்கப்படும் கல்விச் சூழல்: மினசோட்டாவில் கடந்த சில வாரங்களாக நடந்து வரும் குடியேற்றத் துறை சோதனையில் சுமாா் 3,000 போ் வரை பிடிபட்டுள்ளனா். லியாம் படிக்கும் பள்ளியில் மட்டும் இதுவரை நான்கு மாணவா்கள் இவ்வாறு தடுப்புக் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா்.
இதனால் மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக பள்ளிகளுக்கு வரும் மாணவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், கல்விச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கண்காணிப்பாளா் ஜீனா ஸ்டென்விக் வருத்தத்துடன் தெரிவித்தாா்.

