

இந்தியா மீதான 25 சதவீத கூடுதல் வரிவிதிப்பு நடவடிக்கையானது வெற்றியைத் தந்திருப்பதாகவும், இந்தியாவுடன் ஐரோப்பிய நாடுகள் எண்ணெய் வர்த்தகமானது முட்டாள்தனமான நடவடிக்கை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்தியா மீதான அமெரிக்க அரசின் வரி விதிப்பு குறித்து அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசெண்ட் வெள்ளிக்கிழமை (ஜன. 23) அளித்துள்ளதொரு பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:
“ரஷியாவிடமிருந்து எண்ணெய்க் கொள்முதலில் ஈடுபடுவதால் இந்தியா மீது அமெரிக்காவால் 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ரஷியாவிடமிருந்து இந்திய நிறுவனங்களின் எண்ணெய்க் கொள்முதல் சீர்குலைந்துள்ளது. ஆகவே, வரி விதிப்பு நடவடிக்கை பெரும் வெற்றிகரமான ஒன்றாகவே அமைந்துவிட்டது. வரிவிதிப்பு இன்னும் தொடருகிறது. எனினும், அவற்றை நீக்க ஒரு வழி இருப்பதாகவே நான் கருதுகிறேன்.”
ரஷியாவுடனான இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி குறைந்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் காரணமாக, இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 25 சதவீத வரி விதிப்பு நீக்கப்படலாம் என்று தாம் கருதுவதாக நம்பிக்கையுடன் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
மேலும், “எங்களுடைய ஐரோப்பிய கூட்டாளிகள் இந்தியா மீதுன வரி விதிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் நிராகரித்துவிட்டனர். அதற்கான காரணம், அவர்கள் இந்தியாவுடன் பெரும் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகின்றனர். இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வரும்.
உக்ரைன் மீதான போருக்கு முன், ரஷியாவிடமிருந்து சுமார் 2 அல்லது 3 சதவீதம் எண்ணெய் மட்டுமே இந்தியாவால் கொள்முதல் செய்யப்பட்டது. எண்ணெய்க்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து, கொள்முதல் 19 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. இதனால் ரஷியாவுக்கு பெரும் லாபம் கிடைத்தது.
ஆனால், இந்தியாவில் சுத்திகரிக்கப்படும் எண்ணெயை யார் வாங்குகிறார்கள் என்றால், ஐரோப்பியர்கள்! அவர்கள் தங்களுக்கெதிரான போருக்கு தாங்களே நிதியளிக்கின்றனர். இது முட்டாள்தனத்தின் உச்சம்!” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.