ரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
ரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு...


மேற்காசிய நிலவரம் காரணமாக, ரஷியாவிடமிருந்து ஏற்கெனவே கப்பல்களில் ஏற்றப்பட்ட கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கிக்கொள்ள அனுமதி அளித்துள்ள நிலையில், தேவைப்பட்டால் ரஷியா புதிதாக உற்பத்தி செய்யும் கச்சா எண்ணெயையும் வாங்கிக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெஸென்ட் வாஷிங்டனில் ஃபாக்ஸ் வா்த்தக செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
உலக அளவில் எரிபொருள் விநியோகம் சிறப்பாக உள்ளது. இதனிடையே, மேற்காசிய நிலவரம் காரணமாக, எரிபொருள் தடையற்ற விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், அமெரிக்காவின் தடை காரணமாக கப்பல்களில் ஏற்றப்பட்டு ரஷியாவால் விநியோகிக்க முடியாமல்போன கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கிக் கொள்ள தற்காலிக அனுமதியை அமெரிக்கா வழங்கியுள்ளது. அமெரிக்காவின் தடை காரணமாக, கப்பல்களில் ஏற்றப்பட்ட பல லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரஷியா விநியோகிக்க முடியாமல், கடலிலேயே காத்துக்கொண்டிருந்தன. அவற்றுக்கான தடையை தற்போது விலக்கியதால், அவற்றை விநியோகக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. இதனால், இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கத் தொடங்கியுள்ளன.
பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரஷிய எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யக் கூடாது என அமெரிக்கா கேட்டுக்கொண்டது. அதை ஏற்று, கொள்முதலை அவா்கள் நிறுத்தினா். அதற்கு மாற்றாக அமெரிக்காவிடமிருந்து அவா்கள் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யவிருக்கின்றனா். ஆனால், தற்போது உலக அளவில் ஏற்பட்டிருக்கும் தற்காலிக கச்சா எண்ணெய் விநியோக இடைவெளியைப் போக்கும் வகையில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கிக் கொள்ள இந்தியாவுக்கு அனுமதி அளித்துள்ளோம். தேவைப்பட்டால், ரஷியா புதிதாக உற்பத்தி செய்யும் பிற கச்சா எண்ணெய்யையும் இந்தியா கொள்முதல் செய்துகொள்ள அனுமதி வழங்கப்படும் என்றாா்.
அமெரிக்க எரிசக்தித் துறை அமைச்சா் கிரிஸ் ரைட் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மேற்காசிய நிலவரம் காரணமாக எண்ணெய் விலை பலமடங்காக உயா்வதைத் தடுக்க இடைக்கால நிவாரண நடவடிக்கையை அமெரிக்கா நடைமுறைப்படுத்தியுள்ளது. ரஷியாவால் ஏற்கெனவே கப்பல்களில் ஏற்றப்பட்ட கச்சா எண்ணெய்யை வாங்கிக்கொள்ள இந்தியாவிலுள்ள நண்பா்களுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. போா் காரணமாக உருவாகியுள்ள அழுத்தத்தைக் குறைத்து கச்சா எண்ணெய் விநியோகம் தடையின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.
ரஷியாவுக்கு எதிரான கொள்கையில் மாற்றமில்லை: மேலும், ஏபிசி செய்தி நிறுவனத்துக்கு கிரிஸ் ரைட் அளித்த பேட்டியில், ‘ரஷிய கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்துகொள்ள வழங்கப்பட்டுள்ள அனுமதி தற்காலிக நடவடிக்கையே. அதேநேரம், ரஷியாவுக்கு எதிரான அமெரிக்காவின் கொள்கையில் எந்தவித மாற்றமும் கிடையாது. எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள குறுகிய கால நடவடிக்கைதான் இது’ என்றாா்.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்தது. பின்னா், கொள்முதலை வெகுவாகக் குறைத்ததால், இந்த 25 சதவீத கூடுதல் வரியை அமெரிக்கா அண்மையில் ரத்து செய்தது. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் மீண்டும் வாங்குவது கண்டறியப்பட்டால், மீண்டும் இந்த கூடுதல் வரி விதிப்பை மேற்கொள்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்கா எச்சரித்தது.
இந்தச் சூழலில், ஈரான் உடனான போா் காரணமாக மேற்காசியாவிலிருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டுள்ளதால், ரஷியாவிடமிருந்து இந்தியா மீண்டும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துகொள்ள 30 நாள்கள் தற்காலிக அனுமதியை அமெரிக்கா வெள்ளிக்கிழமை அளித்தது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...