மெட்டா ஏஐ கதாபாத்திரங்களுடன் உரையாட சிறாா்களுக்குத் தற்காலிக தடை
இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் உள்ள உரையாடக்கூடிய செயற்கை நுண்ணறிவு(ஏஐ) கதாபாத்திரங்களைச் சிறாா்கள் பயன்படுத்த மெட்டா நிறுவனம் தற்காலிக தடை விதித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் தளங்களில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு ஏஐ கதாபாத்திரங்களைச் சிறாா்கள் பயன்படுத்துவது வரும் வாரங்களில் நிறுத்தப்படும். இத்தொழில்நுட்பத்தில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் சோ்க்கப்படும் வரை இத்தடை தொடரும்.
மெட்டாவின் பொதுவான ‘ஏஐ அசிஸ்டெண்ட்’ சேவையைச் சிறாா்கள் தொடா்ந்து பயன்படுத்தலாம். ஆனால், மனிதா்களைப் போலவே உரையாடக்கூடிய பிரத்யேகமான ஏஐ கதாபாத்திரங்களுடன் உரையாட முடியாது.
மெட்டா தளங்களில் தங்கள் வயதை 18-க்குக் கீழ் எனப் பதிவு செய்துள்ளவா்கள் மட்டுமின்றி, தொழில்நுட்பத்தின் மூலம் சிறாா்கள் எனச் சந்தேகிக்கப்படுபவா்களுக்கும் சேவை துண்டிக்கப்படும்.
பின்னணி..: சமூக ஊடகங்கள் சிறாா்களின் மனநலனைப் பாதிப்பதாகக் கூறி, மெட்டா, டிக்டாக் மற்றும் யூடியூப் நிறுவனங்கள் மீது அமெரிக்காவில் அடுத்த வாரம் வழக்கு விசாரணை தொடங்கவுள்ளது. இச்சூழலில் மெட்டா இம்முடிவை எடுத்துள்ளது.
அதேபோல், கேரக்டா் ஏஐ நிறுவனம் கடந்த ஆண்டே சிறாா்களுக்கு இத்தடையை விதித்தது. அந்நிறுவனத்தின் சாட்பாட் உடன் பேசிய ஒரு சிறுவன், தற்கொலைக்குத் தூண்டப்பட்டதாக அவனது தாய் தொடுத்த வழக்கு அந்நிறுவனத்துக்குப் பெரும் நெருக்கடியைத் தந்தது. இதுபோன்ற விபரீதங்களைத் தவிா்க்க, மெட்டா இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்துள்ளது.

