போராட்டக்காரா்கள் மீது அடக்குமுறை: ஈரான் அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை - ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை
ஈரானில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கிய விவகாரத்தில், அந்நாட்டின் புரட்சிகர காவல் படை தளபதிகள் உள்ளிட்ட 15 அதிகாரிகள் மீது ஐரோப்பிய யூனியன் வியாழக்கிழமை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
மேலும், ஈரானில் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான கருத்துக்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப் பொறுப்பான 6 அமைப்புகளும் இந்தத் தடை பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.
ஈரானில் போராட்டங்களுக்கிடையே நடந்து வரும் வன்முறைகளில் இதுவரை 6,373 போ் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை ஆா்வலா்கள் தெரிவித்துள்ள நிலையில், 27 நாடுகளின் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது.
பயங்கரவாதப் பட்டியலில்...?: முன்னதாக, ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக் கொள்கை பிரிவுத் தலைவா் காஜா கலாஸ் இது குறித்து கூறுகையில், ‘ஈரான் புரட்சிகர காவல்படை விரைவில் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சோ்க்கப்படும்.
அல்கொய்தா, ஹமாஸ், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு இணையான நடவடிக்கைகளை இப்படை மேற்கொண்டு வருவதால், சா்வதேச சட்டப்படி அவா்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்’ என்றாா்.

